2025 மே 07, புதன்கிழமை

'மரத்துக்கு உரிமை கோரும் குருவிச்சைகளுமல்ல, வேர்களுக்கு சவால் விடுபவர்களுமல்ல'

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

யுத்தம் ஒன்றில் முதலில் பலியாவது உண்மை என்பார்கள், யுத்த விமர்சகர்கள். அதாவது எவ்வாறாவது யுத்தம் வெல்லப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். அதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலரது அரசியல் உயிர் வாழ்வுக்கு நான் பலியாக வேண்டும். இது இன்று அரசியலில் பிரகாசித்தவர்களுக்கோ அல்லது அரசியலில் ஒளி மங்கியவர்களுக்கோ அவர்களது அடிவருடிகளுக்கோ அனைவருக்கும் பொருந்தும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று திங்கட் கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

என்னை அழிக்க நினைப்பவர்கள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறியாதவர்கள். போராட்டத்தில் பங்குபற்றாதவர்கள், குறைந்த பட்சம் போராட்டத்துக்கு தார்மீக உதவி நல்கியவர்கள் கூட இல்லை. இவர்கள்தான் தமது தனிப்பட்ட குரோத, விரோதங்களைத் தீர்ப்பதற்காக  என்னைப் பற்றி கீழ்த்தர விமர்சனங்களை மேற்கொள்கின்றார்கள். இந்த மேதாவிகளுக்கு எனது போராட்ட வரலாறு பற்றி என்ன தெரியும்.

துரதிஸ்டவசமாக 1986ஆம் ஆண்டில் இயக்க முரண்பாடுகள் ஏற்பட்டதன் விளைவாக சகோதரப் படுகொலைகள் நிகழ்ந்ததும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளேயாகும். இந்த விமர்சகர்கள், என்னோடு தொடர்புபடுத்திக் குறிப்பிடும் பெயர் கொண்ட நபர்கள் இயக்க முரண்பாட்டுக் காலத்தில் கொல்லப்பட்டிருக்கலாம். இவற்றுக்கு தனிமனிதப் பகையோ, தனிமனித விரோதங்களோ காரணமாக இருக்க முடியாது.

இந்த வரலாற்றுப்பின்னணி அறிந்து, புரிந்து, காலத்தின் தேவையுணர்ந்து 2002ஆம் ஆண்டில் பிரபாகரன் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து ஒன்றிணைந்து எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் தத்தமது கட்சி சார்பாக விட்ட தவறுகளை உணர்ந்து அதன் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து உருவாக்கப்பட்தே கூட்டமைப்பாகும்.

வரலாறு இவ்வாறிருக்க, கீழ்த்தரமான விமர்சனங்களை மட்டக்களப்பில் மாத்திரம் அதுவும் ஜனாவை மாத்திரம் குறிவைத்து தாக்குவதன் நோக்கம் என்ன?

ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுகின்றேன்.நாங்கள் குருவிச்சைகளும் அல்ல, சொந்தமல்லாத மரத்துக்கு உரிமை கோருபவர்களுமல்ல, வேர்களுக்குச் சவால் விடும் விழுதுகளும் அல்ல.  தமிழர் தேசிய விடுதலைக்காக ஆணிவேர் கொண்ட விருட்சம் என்பதை இந்த அனாமதேயங்கள் புரிந்து கொண்டால் சரி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X