2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

2008இல் தேர்தலை புறக்கணித்த த.தே.கூ. இப்போது ஏன் போட்டியிடுகின்றது?: சந்திரகாந்தன்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

இணைந்த வடக்கு, கிழக்கே எமது இலக்கு ஆகும்.  கிழக்கு மாகாணசபையையும் கிழக்கு மாகாணத் தேர்தலையும் நாம் புறக்கணிக்கின்றோம் என்று  அறிக்கையிட்டு 2008இல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை புறக்கணித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது துளியளவும் வெட்கமின்றி ஏன் இன்று எமது மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பினார்.

வாகரை கண்டலடி காளி கோவில் முன்றலில் நேற்று புதன்கிழமை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் தலைமையில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வந்தாலும் கூடப் பரவாயில்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆட்சியமைக்கக்கூடாது என்றும் ஆளும் கட்சியில் போட்டியிடும் எந்தத் தமிழனும் முதலமைச்சராக வரக்கூடாது என்றும் சம்பந்தன் கூறியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் எமது தேசியக்கொடி புலிக்கொடி என்று கூறமுடியுமா? தமிழீழம் வேண்டும் என இளைஞர்களின் உணர்வினைத் தூண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் எவருடைய பிள்ளைகளாவது ஆயுதம் ஏந்திப் போராடியிருக்கிறார்களா? சிங்கள அமைச்சர்களின் பிள்ளைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் கொழும்பில் உள்ள பிரபல்யமான பாடசாலைகளில் ஒன்றாகவே கல்வி கற்கின்றனர்.

1987இல் மாகாணசபை முறைமையை கொண்டுவந்த ராஜீவ்காந்தி, போராளிகளை பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இணையுங்கள் என்று கேட்டிருந்தார். மாகாணசபைத் தீர்வை அன்று முற்றாகவே புறக்கணித்து முள்ளிவாய்க்கால்வரை எமது மக்களை அழைத்துச் சென்று புதைகுழிகளில் தள்ளிவிட்ட பின்னர் தற்போது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களம் இறங்கியிருக்கின்றார்கள் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

62 வருடமாக வாக்களித்து எம்மால் எதையுமே சாதிக்க முடியவில்லை. ஆனால் கடந்த மாகாணசபைத் தேர்தலில் சரியான முறையில் வாக்களித்து நாம் பெற்றுக்கொண்ட அபிவிருத்திகள் எல்லோரும் அறிந்தவை.

உலக வங்கி அறிக்கையினைப் புரட்டிப்பார்த்தால் அபிவிருத்தி, முன்னேற்றம் பற்றி தெட்டத்தெளிவாகத் தெரியும். இருந்தும் மெத்தப் படித்த கூட்டமைப்பினர் என்றுமே அதுபற்றி வாய் திறக்கமாட்டார்கள்.

கிழக்கில் இன்று எமக்குக் கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தினை நாம் இழப்போமாக இருந்தால் இன்னும் 20 வருடங்களுக்கு கிழக்கு மக்களின் தலைகள் மீது மிளகாய் அரைப்பார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை எவராலும் அழிக்க முடியாது. வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் நாம் நிலைத்திருப்போம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் எமது மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளோம்' என்றார்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் நா.திரவியம், வாகரைப் பிரதேசசபைத் தவிசாளர் சூட்டி மற்றும் பிரமுகர்கள், ஆலய நிர்வாக சபையினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம்  ஆலய அபிவிருத்தி நிதிக்கென தனது சொந்த நன்கொடையாக 50,000 ரூபாவினை ஆலய நிர்வாகசபையினரிடம் கையளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .