2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

யானைகளின் அட்டகாசத்திலிருந்து மக்களை பாதுகாக்குமாறு இரா.துரைரெத்தினம் கோரிக்கை

Kogilavani   / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி,லோஹித், எம்.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள யானைகளைப் பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு விடுவதன் மூலம் பொதுமக்களைப் பாதுகாக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்தறமுல்லவில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான்,  செங்கலடி,  வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, ஓட்டமாவடி, வாகரை, வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள எல்லைக் கிராமங்களில் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

அவர்கள் தமது ஜீவனோபாயமாக  விவசாயச் செய்கையை மேற்கொண்டு வாழும் வறிய மக்களாவர்.  அவர்களின்   குடியிருப்புக்குள்  காட்டு யானைகள்  புகுந்து  ஆட்களைக் கொன்றும், பயிர்களை அழித்தும், வீடு வாசல்களை சேதப்படுதியும் வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் சதா பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர். நாளாந்த கருமங்களிலும் ஈடுபடமுடியாமல் தவிக்கின்றனர்.

வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் யானைகளைத் தடுக்க வேலி  அமைத்து தருவதாக உறுதியளித்தனர். இதை அமைப்பதற்கான பொருட்கள் வந்து சேர்ந்து விட்டதாகவும் கூறினர். ஆனால் இதுவரை அதற்குரிய நடவடிக்கையில்  ஈடுபடவில்லை.

இதேவேளை இத்திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தர்கள் அக்கறையுடன் செயல்படுவதும் இரவு பகல் பாராது காடுகளில் அலைந்து யானைகளை விரட்டுவதும் பாராட்டுக்குரியவையாகும்.

வேலி அமைக்கும் வரையிலாவது மனிதருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டு யானைகளை பிடித்து வேறு தூர இடங்களில் உள்ள காடுகளில்  விடுமாறு தங்களை  கேட்டுக்கொள்கின்றேன்.

மேலுள்ள பிரதேசசெயலாளர்  பிரிவுகளில் இதுவரை  யானைகள்  தாக்கி பலியானவர்களின்  விபரங்களை   தங்களின்   கவனத்திற்கு   கொண்டு வருகின்றேன்.

இவர்களின் குடும்பத்தவர்கள் இன்று நிர்க்கதியாகி தவிக்கின்றனர். இவர்களில் நஷ்ட ஈடு வழங்காதவர்களுக்கு விரைந்து அதை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .