2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

புதிய மதுச்சாலைகளுக்கு அனுமதியில்லை; அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

Suganthini Ratnam   / 2011 மே 11 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  எதிர்காலத்தில்   மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்குவதில்லையென்பதுடன்,  மேலதிகமாகவுள்ள மதுபானசாலைகளை இரத்துச் செய்வதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரேரணைக்கமைய  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது. சனத்தொகை பரம்பலுக்கு ஏற்றவகையில் மாத்திரம் மதுபானசாலைகள் இருக்கலாம். மேலதிகமாகவுள்ள மதுபானசாலைகளின் அனுமதிப்பத்திரங்களையும்  இரத்துச் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இங்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவிக்கையில்,

மதுபானசாலைகள் தொடர்பான பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. சுற்றுநிருபத்தின்படி கிழக்கு மாகாணத்தில் 84 மதுபானசாலைகளையே அமைக்க முடியும். அதில் 62 மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏனையவை திருகோணமலை மற்றும்  அம்பாறை மாவட்டங்களிலும் உள்ளன.
 
2009ஆம் ஆண்டு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட சுற்றுநிருபத்தின்படி மேலதிகமாகவுள்ள மதுபானசாலைகளை இரத்துச் செய்வதுடன் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதையும் தடுக்கலாம்.
 
வெளிமாவட்டங்களான புத்தளம், நீர்கொழும்பு, நுவரெலியா போன்ற இடங்களிலிருந்து அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட்டு இங்கு மதுபானசாலைகள் நிறுவப்படுவது கவலைக்குரிய விடயம். மதுபானசாலைகள் விடயத்தில் சரியானதொரு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் எம்.எல்.எ.எம். ஹிஷ்புல்லா தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், பஷீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள் மற்றும்  உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .