2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் மதக் கலவரம் ஏற்படுத்தவே உருவச்சிலைகள் உடைப்பு: ஹிஸ்புல்லா

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

'மட்டக்களப்பில் மதங்களுக்கிடையில் குழப்பத்தை எற்படுத்தவே தீய சக்திகள் மட்டக்களப்பிலுள்ள உருவச்சிலைகளை உடைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கப்படல் வேண்டும்' என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு நகரின் மத்தியிலும் நகரை அண்டிய பகதிகளிலும் இந்த உருவச்சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு வேண்டத்தகாத செயலாகும். இதை செய்தவர்களை பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்.

கடந்த மாதம் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையினுள் திடீரென வைக்கப்பட்ட சரஸ்வதியின் உருவச்சிலையினால் குழப்ப நிலையும் முறன்பாடும் ஏற்பட்டது.

அந்தப் பாடசாலையில் நடைபெற்ற கட்டிட திறப்பு விழாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ள இருந்த போது இந்த சிலை அப்பாடசாலையில் வைக்கப்பட்டது.

கிறிஸ்தவ மிஸனறியின் பாடசாலை என்பதால் இப்பாடசாலையிலிருந்து இந்த சரஸ்வதியின் உருவச்சிலையை அகற்ற வேண்டும் என கிறிஸ்தவ மட்டக்களப்பு மெதடிஸ்த்த திருச்சபையினர் தெரிவித்தனர்.  அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த உருவச்சிலை அகற்றப்பட்டு பின்னர் அந்த சிலை அப்பாடசாலையில் மீண்டும் வைக்கப்பட்டது.

கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது இந்த உருவச்சிலை விவகாரம் தொடர்பாக கிறிஸ்த்தவ மெதடிஸ்த சபையினர்; கல்வியமைச்சரை சந்தித்து இந்த பாடசாலை கிறிஸ்த்தவ மிஸனறியினால் உருவாக்கப்பட்ட பாடசாலை எனக்கூறி அந்த சிலையை அகற்ற பணிப்புரை வழங்கு மாறு கேட்டனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் பாடசாலையில் வைக்கப்பட்ட இந்த சிலை விவகாரம் மதங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது. மட்டக்களப்பு வின்சன்ட் பாடசாலையில் வைக்கப்பட்ட சரஸ்வதி சிலை விவகாரம் தொடர்பாக எனது கவனத்திற்கும் கிறிஸ்த்தவ மெதடிஸ்த்த திருச்சபையினரால் கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பில் மதங்களுக்கிடையில் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி சமூகங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த நான்கு உருவச்சிலைகளும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நாசகார வேலைகளை சந்தர்ப்பமாக சிலர் பயன்படுத்த முனைகின்றனர். மட்டக்களப்பு நகரின் மத்தியில் நாற்பது வருடங்களுக்கு மேலாக மகாத்மா காந்தியின் உருவச்சிலை இருந்து வருகின்றது. அதே போன்று சேதப்படுத்தப்பட்டுள்ள அனைத்து உருவச்சிலைகளுமே நீண்ட வரலாற்றுப் பிண்ணனியைக் கொண்ட பெரியார்களின் உருவச்சிலைகளாகும்.

மகாத்மா காந்தி அனைத்து சமூகங்களினாலும் சமயங்களினாலும் மதிக்கப்படும் மனிதராகும். இவரின் உருவச்சிலை உட்பட ஏனையவர்களின் உருவச்சிலைகளை உடைத்து சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் எனது கண்டனங்களை தெரிவிக்கின்றேன். தீய சக்திகளின் இவ்வாறான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்' எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .