2026 மே 04, திங்கட்கிழமை

வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி; இருவர் படுகாயம்

A.P.Mathan   / 2012 மே 02 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித், ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் இன்று புதன்கிழமை மாலை ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வாழைச்சேனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நடைபெற்ற இச்சம்பவத்தினையடுத்து பொதுமக்கள் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று மட்டக்களப்புக்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் - கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களை பார்வையிட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்துக்காக வருகைதந்துள்ளனர். இந்த நிலையில் வந்தாறுமூலை, அம்பலத்தடிக்கருகில் வீதியைக் கடக்க முனைந்த பெண்களிருவர் மீதும் சைக்கிளில் வந்த பெண்ணொருவர் மீதும் அந்த தொடரணியில் வந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இதன்போது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 5.45 மணியளவில் மாரியம்மன் கோயிலடி வந்தாறுமுலையில் இடம்பெற்ற குறித்த விபத்தில் பெரிய தம்பிரான் வீதி வந்தாறுமுலையைச் சேர்ந்த பொன்னுத்துரை ஜீவா (வயது 30) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். மாணவியான சிவலிங்கம் சிந்துகா (வயது 12), சுமதி (வயது 40) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்ட வேளையில் படையினர் - பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனால் சில இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கெண்டு கேட்டபோது குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் சென்றிருப்பதாகவும் தற்போது வரை தமக்கு அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .