2026 மே 04, திங்கட்கிழமை

தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறும் அரசியல்வாதிகள் தொழிலாளர்களின் பிரச்சினைகளை சிந்திப்பதில்லை : கிழக்

Super User   / 2012 மே 02 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித்)


தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கவுமில்லை, எந்த நடவடிக்கைகளும் எடுக்கவுமில்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.

நேற்று நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'இன்று கிழக்கிலே இருக்கின்ற தொழிலாளர்கள் தமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் சலுகைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் எமது தொழிலாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். ஒவ்வொரு துறையை சார்ந்த தொழிலாளர்களும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்தனர். அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் அக்கறையோடு செயற்பட்டு வருகின்றோம். இவ்வளவு காலமும் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் நடாத்தும் அரசியல்வாதிகள் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கவுமில்லை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவுமில்லை.

கிழக்கிலே தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் எத்தனையோ அரசியல் கட்சிகள் மக்களிடம் வாக்குக்கேட்டு வருவார்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே அவர்களுக்கு தொழிலாளர்களின் ஞாபகம் வரும். தங்களுக்கு வாக்குப்போட்ட தொழிலாளர்களின் தினத்திலே ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்ய முடியாத அரசியல்வாதிகள் தொழிலாளர்களுக்காகவும் மக்களுக்காகவும் எதனைச் செய்யப்போகின்றனர்?  நாம் எமது கட்சியினை உருவாக்கி ஐந்து வருடங்கள் ஆகும் இவ்வேளையில் தொழிலாளர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம். அதன் வெளிப்பாடாகத்தான் பிரமாண்டமான முறையிலே இந்த மேதின நிகழ்வையும் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இன்று பிள்ளையான் அரசாங்கத்தோடு இருக்கின்றான், ஜனாதிபதியுடன் இருக்கின்றான் என்றெல்லாம் கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்கின்றனர்.  மக்கள் சில விடயங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். யுத்தத்தால் அழிவடைந்த எமது பிரதேசங்களை நாம் கட்டியெழுப்பவேண்டி இருக்கின்றது.

அரசாங்கத்தோடு இணைந்து நாம் செயற்படுகின்றபோதுதான் நாம் அபிவிருத்திகளை செய்ய முடியும். கூட்டமைப்பினர்போல் எதிர்க் கட்சியில் இருந்தால் அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற முடியுமே தவிர எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனால்தான் இன்று கிழக்கு மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய முடிகின்றது. ஜனாதிபதியும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்படுகின்றார். எமது இந்த மேதின நிகழ்விற்கு வாழ்த்துச் செய்தியினைக்கூட ஜனாதிபதி  அனுப்பியிருக்கின்றார்.

நாம் அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தியினை மேற்கொண்டு வரும் அதேவேளை எமது அதிகாரங்கள் உரிமைகளைப் பெறுவது தொடர்பில் அரசாங்கத்துடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நாம் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும் எமது அதிகாரங்கள் உரிமைகளை பெறுவதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும்போது பிள்ளையான் அரசாங்கத்துடன் இருக்கின்றான். ஜனாதிபதியோடு இருக்கின்றான் என்றெல்லாம் சொல்கின்றனர். ஆனால், கூட்டமைப்பினரும் கூட்டமைப்பு தலைமைகளும் அரசாங்கத்துடன் பேசலாம் ஜனாதிபதியுடன் பேசலாம். ஒரு கிழக்கு மாகாணத்தான் ஜனாதிபதியுடன் பேசக்கூடாது ஆனால் அவர்கள் பேசலாம் எங்கே நியாயம் இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கின்றோம் என்று பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் அரசின் சலுகைகளைப் பெறவில்லையா? வேலை வாய்ப்புக்களை பெறவில்லையா? தாங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு நாம் அரசாங்கத்தோடு இருக்கின்றோம் என்று மக்களுக்கு உணர்ச்சி வார்த்தைகளைக்கூறி அரசியல் நடத்த நினைக்கின்றனர். அரசாங்கத்துடன் நாம் இணைந்து செயற்படுகின்றபோதுதான் அபிவிருத்தியினை நாம் முன்னெடுக்க முடியும் என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பிலே இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜாவிற்கோ யோகேஸ்வரனுக்கோ அரியநேந்திரனுக்கோ தங்கள் கட்சியில் என்ன நடக்கின்றது என்பது தெரியாது. கட்சி தொடர்பான விடயங்களில் கட்சி இவர்களை இணைத்துக் கொள்வதுமில்லை. அரசுடனான சந்திப்பாக இருக்கட்டும் வெளிநாட்டுப் பயணங்களாக இருக்கட்டும் எதற்கும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை.  அண்மையில்கூட இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை வந்தபோது கூட்டமைப்பினர் இந்திய நாடாளுமன்றக் குழுவினரை சந்தித்தனர். அச்சந்திப்பிலும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

கடந்த 01.01.2012 ஆம் திகதி சம்பந்தனுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் பேசுவோம் என்று தெரிவித்திருந்தேன். இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. எமது தேசிய மாநாட்டு பிரகடனம் தொடர்பாக முன்கூட்டியே சில தீர்மானங்களை எடுப்பதற்காகவே பேச்சுவார்த்தை நடத்த கடிதம் அனுப்பினேன். தேசிய மாநாட்டிலே வடக்கு கிழக்கு இணைக்கக்கூடாது என்று பிரகடனம் செய்திருக்கின்றோம். சம்பந்தன் எங்களோடு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தால் சுமுகமான முறையிலே பேச்சுவார்த்தை நடந்திருந்தால் வடக்கு கிழக்கு இணைப்பது தொடர்பாக நாமும் சிந்தித்து நல்ல தீர்மானங்களை எடுத்திருக்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .