2026 மே 04, திங்கட்கிழமை

கரடியனாறு பிரதேசத்தில் நீர்வழங்கல் திட்டம் ஆரம்பித்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 மே 09 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ,எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு பிரதேசத்திற்கான நீர்வழங்கல் திட்டம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2064 பயனாளிகள் பயனடையும் வகையில்  68 மில்லியன் ரூபா செலவில் கரடியனாறு கிராமத்தில் இந்நீர் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் எஸ்.வினோத் , கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி எஸ்.நமசிவாயம், இத்திட்டத்திற்கான பொறியியலாளர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளரும் செங்கலடி வர்த்தக சங்கத்தலைவருமான க.மோகன்,; பிரதேசசபையின் உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


இலங்கை அரசாங்கத்திற்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்படுகின்ற 764 மில்லியன் ஜென் உதவியும் 5 மில்லியன் சமூக பங்களிப்பும் இத்திட்டத்திற்காக உள்வாங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாண நீர்வழங்கல் திட்டத்தின் 2008ஆம் ஆண்டின் சாத்தியவள ஆய்வின் மூலம் 28 உபதிட்டங்களை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் மேற்கொள்வதற்கு இனங்காணப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 பிரதான நீர்வழங்கல் திட்டமும் ஒரு குழாய்க்கிணறு அமைக்கும் திட்டமும் உள்வாங்கப்பட்டுள்ளன. குழாய்க்கிணறு அமைக்கும் திட்டத்தில் 06 குழாய்க் கிணறுகள் அமைக்கும் வேலையும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மேலும் இத்திட்டமானது தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுசரணை ஊடாக சிலோன் நீர் நிர்மாண நிறுவனத்தின் ஆலோசனையுடனும்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசங்களிற்கு குடிநீர் வசதியினை வழங்குவதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இதேவேளை, மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கான நீர் வழங்கல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும் கடந்த திங்கட்கிழமை மதுரங்கேணிக்குளம் பிரதேசத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனடிப்படையில் கோறளைப் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மதுரங்கேணிக்குளம் கிராமத்தில் 587 பயனாளிகள் பயன்பெறும் நோக்குடன் 29 மில்லியன் செலவில் இந்நீர் விநியோகத்திட்டமானது சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .