2026 மே 04, திங்கட்கிழமை

நிரந்தர வீடுகளின்றி சிரமப்படுவதாக சிகரம் மக்கள் கவலை

Suganthini Ratnam   / 2012 மே 09 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் தாங்கள் மீள்குடியேறி 8 வருடங்களானபோதிலும், தங்களுக்கு இன்னமும் நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லையென அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக சிகரம் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த இம்மக்கள், புதிய காத்தான்குடி பிரதேச கடற்கரையை அண்டி வாழ்ந்துவந்திருந்தனர்.  இந்நிலையில், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால்; இவர்களின் இருப்பிடங்களும் உடைமைகளும் சேதமடைந்த நிலையில் இவர்கள் தங்களது சிகரம் கிராமத்தில் மீள்குடியேறினர்.

தற்காலிகக் கூடாரங்களில் வாழ்ந்துவந்த இம்மக்களுக்கு அரசசார்பற்ற நிறுவனமொன்று தற்காலிகக் குடிசைகளை அமைத்து கொடுத்தது. இந்த தற்காலிகக் குடிசைகளில் கடந்த 8 வருடங்களாக இம்மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.  63 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் 52 குடும்பங்கள் தற்காலிக குடிசைகளில் வசித்து வருகின்றனர்.

பல தடவைகள் நிரந்தர வீட்டுக்கான கோரிக்கைகளை அரசியல்வாதிகளிடமும்  அரசாங்க அதிகாரிகளிடமும் தாம் முன்வைத்ததாகவும் இருப்பினும் தமது கோரிக்கைகள்  நிறைவேற்றிக்கொடுக்கப்படவில்லையெனவும் இக்கிராம மக்கள் தெரிவித்தனர்.  குடிசைக் கைத்தொழிலையே தாம் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாகவும்  மழை காலத்திலும் வெயில் காலத்திலும் தாம் வசிக்கும் தற்காலிக குடிசைகளில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் இம்மக்கள் குறிப்பிட்டனர்.  இந்நிலையில் நிரந்த வீடுகளை தங்களுக்கு நிர்மாணித்துத் தருவதுடன்,  அரசாங்க பாடசாலையொன்றையும் அமைத்து தருமாறும் இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .