2026 மே 04, திங்கட்கிழமை

வின்சன்ட் பாடசாலை சரஸ்வதி சிலை தொடர்பான வழக்கு முடிவு

Kogilavani   / 2012 மே 15 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, கே.வதனகுமார்)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பாடசாலையில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று திங்கட்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இவ்வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக நீதவான் அறிவித்ததுடன் வழக்கு தாக்கல் செய்யப்படும் போது என்ன நிலையில் பாடசாலை  இருந்ததோ அந்த நிலையையே தொடர்ந்தும் பேனுமாறும் உத்தரவிட்டார்.

பாடசாலை மாணவிகளினால் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்ட நிலையில் அதனை மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையினர் எதிர்த்த போது பாரிய சர்ச்சை ஏற்பட்டது.

இந் நிலையில் மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையினர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் சிலை அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முறைப்பாடு ஒன்றினை  செய்திருந்தனர்.

குற்றவியல் நடவடிக்கை கோவை 81 கீழ், சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டதனால் சமதானக்குலைவு ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு பொலிஸார் வழக்கொன்றை தாக்கள் செய்திருந்தனர்.

இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு வின்சண்ட் பெண்கள் உயர்தர பாடசாலை சார்பில் அதன் அதிபரும், மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை சார்பில் மதகுரு ஒருவரும் இதன்போது ஆஜராகியிருந்தனர்.

பாடசாலையில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களில் சமாதானக்குலைவு எதுவும் ஏற்படவில்லை.

இதனால் சமாதானக்குலைவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட வழக்கு பிரயோசனமற்றது. ஆதலால் இவ்வழக்கை முடிவுக்கு கொண்டு வருமாறு அதிபர் சார்பு சட்டத்தரணிகளான பேரின்பம் பிரேம்நாத், செல்வி கிர்த்திகா, எம்.முத்துராசா ஆகிய சட்டத்தரணிகள் கூறினார்.

இதனை ஆராய்ந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா சமாதானக் குலைவு ஏற்படாத நிலையில், வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்ததுடன் வழக்கு தாக்கல் செய்யப்படும் போது என்ன நிலையில் பாடசாலை  இருந்ததோ அந்த நிலையையே பேனுமாறும் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை சார்பில் சட்டத்தரணிகளான மரியம் சுலோஜன், ஏ.பளீல் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .