2026 மே 04, திங்கட்கிழமை

லண்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவரின் மரணத்தில் சந்தேகம்: பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்

Kogilavani   / 2012 மே 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

லண்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த மரியதாஸ் முரளிதாஸின் மரணத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் அதனால் அது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சடலத்தினை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் முரளிதாஸின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அது தொடர்பில் அவர் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்

'எனது மகன் முரளிதாஸ் உயர் கல்வி கற்பதற்காக மூன்றரை வருட விஸாவில் ஐக்கிய ராச்சியத்துக்கு சென்றிருந்தார். அவர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் கூட்டுறவு பரிசோதகராக மட்டக்களப்பில் கடமையாற்றியிருந்தார்.

தான் கல்வி கற்பதாகவும், விடுமுறை நேரங்களில் வேலைக்குச் செல்வதாகவும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அடிக்கடி எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது தெரிவித்திருந்தார். அத்துடன் அவரது மனைவியுடனும் உரையாடி வருவது வழக்கமாகும்.

அவர், கல்லூரியில் கல்வி கற்பதாகவும் விடுதியில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இவர் கடைசியாக மனைவியுடன், கடந்த 8ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு உரையாடியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி லண்டனிலுள்ள மல்லிகா (சந்திரா) என்பவர் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு பி.ப 4.30 மணியளவில் எனது மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறிவித்திருந்தார்.

அச் செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சியும் கவலையுமடைந்தோம். இந் நிலையில், இலங்கை அரசோ, இங்கிலாந்து அரசோ எங்களுக்கு எந்தவிதமான அறிவித்தலையும் தரவில்லை.

எனது மகன் தற்கொலை செய்து கொள்வதற்கான எந்த விதமான காரணமும் இல்லாத நிலையில், அவரது மரணத்தை தற்கொலை என எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. எனவே எனது மகனின் மரணம் தொடர்பாக பூரண விசாரணை நடத்தி அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கும், எனது மகளின் சடலத்தை உடனடியாக இலங்கைக்குக் கொண்டு வருவதற்கும் முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே இவற்றுக்கு ஆவன செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .