2026 மே 04, திங்கட்கிழமை

தொழிற்பயிற்சி அதிகார சபையின் பங்களிப்பு இனிவரும் காலங்களிலும் காத்திரமானதாக இருக்கும்: இந்திய உயர் ஸ

Kogilavani   / 2012 மே 26 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


'எதிர்கால உலகத்தில் திறன் அபிவிருத்திகளே தேவையானவைகளாக உள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் தொழில் நுட்பத்திறன் மிக்கவர்களாக மாறி எதிர்காலத்தில் சிறப்பான தொழில்துறைகள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். அந்தவகையில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் பங்களிப்பு இனிவரும் காலங்களிலும் காத்திரமானதாக இருக்கும்' என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்தார்.

ஒந்தாச்சி மடத்தில் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தினை நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் பிரதித் தலைவர் சட்டத்தரணி லெஸ்வி வீரமஞ்சரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர்,

'சரியான நேரத்தில் இப்பிரதேசத்திற்குத் தேவையான வளம், திறன், தொழில் நுட்பம் என்பவற்றினை அடையாளம் கண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது சிறப்பானதாகும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சிறந்ததொரு நல்லுறவு இருந்து வருகிறது. இவ்வாறான திட்டங்களுக்கு இலங்கை சிறந்த ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. அதனாலேயே சரியான தேவையான நேரத்தில் இந்த பயிற்சி நிலையத்தினை மேம்படுத்தி திறந்து வைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.

இந் நிகழ்வில், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஒந்தச்சிமடம் கிராமிய தொழிற்பயிற்சி நிலையம், தொழில் பயிறற்சி அதிகார சபையின் 15 மில்லியன் செலவில் கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு இந்தியாவின் 75 மில்லியன் செலவான உபகரணங்கள் உள்ளீடு செய்யப்பட்டு தொழில் பயிற்சி நிலையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் பயிற்சி நிலையத்தில், வாகன திருத்துதல், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள்  தொடர்பான பயிற்சி நெறிகளுக்கான உபகரணங்கள், விவசாயத்தினை மேம்படுத்துதல் தொடர்பான பயிற்சிகளுக்கான உபகரணங்கள் என பல உபகரணங்கள், இயந்திரங்கள், கருவிகள், உட்பட பல பிரதேசத்திற்குத் தேவையான இயந்திர தொழில் திறன் கருவிகள் அடங்குகின்றன.

இந்திய இலங்கை நட்புறவுத்திட்டத்தின் கீழ் தொழில்சார் கல்வியை விருத்திசெய்யும் நோக்கில் 1336 மில்லியன் ரூபாவை இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது.

ஏற்கனவே இந்திய எதிர்க்கட்சித் தலைவி தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் வந்தாறுமூலையில் தொழில்பயிற்சி நிலையத்தினைத் திறந்து வைத்தனர். அடுத்ததாக ஓந்தாச்சிமடம் தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நுவரெலியாவில் தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்படவுள்ளது.

திருமலை மற்றும் வடக்கு மாகாணத்துக்கான தொழில்பயிற்சி நிலையத்துக்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. திருமலை மற்றும் ஓமந்தை, கைதடி ஆகிய இடங்களில் இந்த நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.எம்.ரி.இன்ரர் நெஷனல் நிறுவனம் இந்தக் கட்டங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. திருமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கென 1200 மில்லியன் செலவிடப்படவுள்ளது. இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் விரைவில் அமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .