2026 மே 04, திங்கட்கிழமை

யுத்த சூழலால் காணிகளை இழந்த மக்கள் காணிகளை மீளப்பெறும் சட்டத்திருத்தத்தை சமர்ப்பிக்கவுள்ளேன்: நீதியம

Suganthini Ratnam   / 2012 மே 27 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                               (எம்.சுக்ரி,ஜிப்ரான்)

யுத்த சூழல் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணிகளை இழந்த மக்களுக்கு அவர்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொடுக்கும் சட்டத்திருத்தமொன்றை மிக விரைவில் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை மாலை புதிய காதி  நீதிமன்ற கட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் காணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்தவர்கள், யுத்த சூழலின்போது காணிகளை பலாத்காரமாக இழந்தவர்கள் ஆகியோர் தங்களது  காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர். இதன் காரணமாக ஆட்சியுரிமை மாற்றத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான சட்டத்திருத்தமொன்றை கூடிய விரைவில் நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் சமர்ப்பிக்கவுள்ளேன்.

கடந்த கால யுத்தசூழல்  காரணமாக தங்களது காணிகளை விட்டு இடம்பெயர்ந்தவர்கள், தற்போதைய சூழ்நிலையில் காணிகளை விட்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்டவர்கள், அச்சம் காரணமாக மிகக் குறைந்த விலைக்கு காணிகளை விற்பனை செய்தவர்கள் ஆகியோர்  காணி உரிமையை இழந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்களின் காணிகளையும் சிலர் பின்னர் அடாவடித்தனமாக கைப்பற்றியுள்ளனர்.  பத்து வருடங்களாக காணியில் இருந்தவர்கள் சொந்தமாக்கிக்கொள்ளும் ஆட்சியுரிமை சட்டத்தின் மூலம், காணிகள் இவ்வாறு இழக்கப்பட்டுள்ளன. இதனை சீர்செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

இவ்வாறு காணிகளை இழந்தவர்கள், காணி ஆட்சியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதன் மூலம் இழந்த காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும். யுத்தத்திற்கு  பின்னரான சூழ்நிலையில்  நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதன் மூலம் அனைத்துச் சமூகத்திற்கும் நன்மை கிடைக்கும்.

காதி நீதிமன்றங்களின் பௌதீக வளங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே காத்தான்குடியில் உள்ள இந்த காதி நீதிமன்றத்திற்கும் நிரந்தரமான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் 14 காதி  நீதிமன்றக் கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ள அதேவேளை, அடுத்த வருடமும் இவ்வாறு 14 காதி நீதிமன்றக் கட்டிடங்களை நிர்மாணிக்கவுள்ளோம்.

இதற்காக எமக்கு உதவிவரும் ஜனாதிபதிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இதேவேளை, காதி நீதிமன்றங்கள் இருக்கின்றபோதும்,  அவைகளுக்கு அதிகாரங்கள் ஏற்கெனவே இருக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் நீண்டகாலமாக நாடாளுமன்றத்தில் பேசிவந்த நிலையில், பின்னர் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்னர் சரத் என் சில்வா பிரதம நீதியரசராக இருந்தபோது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு காதி நீதிபதிகளின் அந்தஸ்த்து உயர்த்தப்பட்டன. சரத் என் சில்வா தற்போது அரசாங்கத்தை அவ்வப்போது விமர்சிக்கும் ஒருவராக இருந்தாலும் அவர் இந்த காதி  நீதிபதிகளின் அந்தஸ்த்தை உயர்த்தியமைக்காக நாம் அவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

இதற்கு முன்னர் காதி நீதிமன்றங்கள் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்தன. நீதிமன்றங்களுக்குரிய அந்தஸ்த்து இருக்கவில்லை. அது பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் மாற்றப்பட்டதை அடுத்து இப்போது நீதிமன்றத்திற்குரிய அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

காதி  நீதிபதிகளின் தீர்ப்புக்களுக்கு இடையே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. குறித்த பிணக்குகள் அடிக்கடி மேன்முறையீடு செய்யப்படுகின்றன. இதனால் சில புதிய திருத்தங்களை கொண்டுவர ஆலோசித்து வருகின்றோம். முஸ்லிம் நீதவான்களை காதி நீதிபதிகளாக நியமிக்கவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்காக நீதியரசர் சலீம் மர்சூக் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் அறிக்கை அடுத்த மாதமளவில்  கிடைக்கும் என நினைக்கின்றேன். அதைக் கொண்டு சில திருத்தங்களை செய்ய முயற்சி செய்கின்றோம். பிணக்குகளை தீர்த்து வைப்பதில் எதிர்நோக்கும் சிக்கல்கள், புதிய சிபாரிசுகள் என்பன இதில் ஆலோசிக்கப்படும்.
இது விடயமாக தற்போதைய பிரதம நீதியரசரிடமும் பேசியுள்ளோம். காதி நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நாம் நிதிகளை ஓதுக்கீடு செய்துள்ளோம். அந்த வகையில் இந்த காத்தான்குடி காதி  நீதிமன்ற கட்டிடத்திற்கு தேவையான சுற்றுமதில் அமைக்கப்படும்' என்றார்.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்,; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி காதி நீதிபதி ஏ.எம்.ஹிழ்ர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0

  • Jaleel jp Sunday, 27 May 2012 06:19 AM

    சேர், தயவு செய்து, புத்தளத்து மக்களுக்கும் இது போன்ற ஒரு வசதியினை செய்து கொடுக்குமாறு தயவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். காரணம் எமது புத்தள மக்கள் மதுரங்குளி பசாரிலும், கடயாமோட்டய் பாடசாலையிலும் இந்த காதி நீதிமன்றங்களை நடத்துகிரார்கள். ஒரு புரம் மதுரங்குளி பசாரில் நடத்தும்போது ஏனயைவர்கள் சிரிக்கிரார்கள். கடயாமோட்டய் பாடசாலையில் நடத்தும்போது எதிர்காலத்து பிள்ளைகளை பதிக்கும். எனவே, இந்த உதவியை செய்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    (நோக்கம் பிரிப்பதல்ல, புத்திககளை கூறி சேர்த்துவைப்பதே)

    நன்றியுடன் ஜலில் ஜே.பி மதுரங்குளி(கட்டாரில் இருந்து)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .