2026 மே 04, திங்கட்கிழமை

மு.கா. மாதரணியை அரசியல் கட்சியாக கொண்டு செல்வது சுலபமல்ல: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Suganthini Ratnam   / 2012 மே 28 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


வித்தியாசமான சமூகக் கட்டமைப்பைக் கொண்ட எமது சமூகத்தில்; முஸ்லிம் காங்கிரஸ் மாதரணி என்ற விடயத்தை ஒரு அரசியல் கட்சியின் அங்கமாக, உயிரோட்டமாக கொண்டு செல்வது சுலபமான காரியமல்ல என  நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை  மாதர் அணி அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மாதர் அணி என்ற விடயத்தை ஒழுங்குபடுத்தி பரவலாக நடைமுறைப்படுத்துவது என்பது தலைவருடைய காலத்திலும் எங்களுடைய காலத்திலும் அவ்வளவு சுலபமானதாக அமையவி;ல்லை.

கட்சிக்குள்ளே பல ஊர்களிலே இந்த அணிகள் இயங்கினாலும் வித்தியாசமான சமூகக் கட்டமைப்புக்குள் முஸ்லிம் காங்கிரஸ் மாதரணி என்ற விடயத்தை ஒரு அரசியல் கட்சியின் அங்கமாக உயிரோட்டமாக கொண்டுசெல்வது அவ்வளவு சுலபம் இல்லை.  எமது சமூகக் கட்டுப்பாடுகள் இதற்கு மிகப் பெரிய தடை.

மலேசியாவில் இலட்சக்கணக்கான பெண்கள் சுயதொழிலில் ஈடுபடுவது, அரசியலில் ஈடுபடுவது போன்ற பல விவகாரங்களில்; ஈடுபடுகின்றார்கள். அம்னு வனிதா என்கிற அமைப்பின் ஊடாக கொண்டு செல்கிறார்கள். இவர்கள் நாட்டில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்கிற அளவுக்கான அதிகாரத்துடன் இருக்கிறார்கள்.

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸின் மாதர் அணியையும் பலப்படுத்தும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அது ஓரிரு நாட்களில் சேர்ந்து விடக் கூடிய இலக்கு அல்ல. அதற்கு சமூகக் கட்டமைப்பு உகந்ததாக இல்லை என்றாலும் படிப்படியாகச் சேர்த்துப்பிடித்துக் கொண்டு அடையலாம் என நினைக்கிறோம்.

எனது சொந்த மாவட்டமான கண்டியில் அபூர்வமான விடயம் ஒன்று  நடந்தது. யட்டிநுவர பிரதேச சபைக்கு ஒரு  பெண் இறுதி நேரத்தில் வந்து என்னையும் தேர்தல் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள் எனக் கேட்டார்.

நாங்களும் வேறு வழியில்லாமல் அவருக்கு இடம் கொடுத்தோம். அவர் எங்களது கட்சி உறுப்பினர்கள் பெற்ற வாக்குகளைவிடவும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவர், ஏன் வெற்றிபெற்றார் என்றால் ஒரு தன்னார்வ அமைப்பினை சுயமாக நடத்தி பலபேரின் பொருளாதார நிலைகளின் மேம்பாடுகளுக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

அதேபோன்றுதான் சகோதரி சல்மாவை காத்தான்குடியில் தேர்தலில் நிறுத்தி வெல்ல வைத்தது என்பது முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை என நினைக்கிறேன். அவர் இங்கு மக்களைச் சம்பாதித்து வைத்திருந்தார். அதனாலேயே அவரால் வெற்றி பெறமுடிந்தது.

இதனை அடுத்து மாதரணிக்கான பொறுப்பைக் கொடுத்திருக்கிறோம். முதல் கட்டமாக இந்த மாதரணி அலுவலகம் திறக்கப்படுகிறது. விரைவில் மாதர்களுக்கான கருத்தரங்கு ஒன்றினை நடத்தவுள்ளோம்.  அது வெறுமனே அரசியலை மட்டும் பேசுவதாக இல்லாமல் பெண்களுக்குப் பயன்படக்கூடிய பல்வேறு துறைகள்சார் பயிற்சிகளை வழங்கி எங்களுடைய மாதரணியைப் பலப்படுத்துவதற்கான வேலைகளையும் செய்யவுள்ளோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .