2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தேர்தலில் முழு மூச்சாக பங்குபற்றி ஆட்சியை கைப்பற்றுவதே எமது நோக்கம்: அடைக்கலநாதன்

Super User   / 2012 ஜூலை 11 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   
                                                                                          (ரி.லோஹித்)


"வடக்கு கிழக்கில் இரண்டு மாகாணங்களின் ஆட்சியை கைப்பற்றும் பட்சத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் இரண்டு அரசாங்கங்களும் பேசி சில முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. எனவே இந்த தேர்தலில் நாங்கள் முழு மூச்சாக பங்குபற்றி ஆட்சியை கைப்பற்றுவதே எங்களது நோக்கமாகும்" என வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று மட்டக்களப்புக்கு விஜயம்செய்த அவர், மட்டக்களப்பு டெலோ அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 
"வடக்கு கிழக்கில் இரண்டு மாகாணங்களின் ஆட்சியை கைப்பற்றும் பட்சத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் இரண்டு அரசாங்கங்களும் பேசி சில முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. எனவே இந்த தேர்தலில் நாங்கள் முழு மூச்சாக பங்குபற்றி ஆட்சியை கைப்பற்றுவதே எங்களது நோக்கமாகும்.

கிழக்கு மாகாணத்தில் கடந்தமுறை நாங்கள் போட்டியிடவில்லை. இம்முறை நாங்கள் போட்டியிடுவதன் நோக்கத்தை நாங்கள் ஏற்கனவே சொல்லியுள்ளோம். இந்த தேர்தலானது வரலாற்று முக்கியத்துவமிக்க தேர்தலாகும்.

காரணம் என்னவென்றால், உலக நாடுகளுக்கு தமிழ் மக்களின் உரிமை மற்றும் இன்று என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை வெளிக்காட்ட வேண்டிய ஒரு தேர்தலாகவே நாங்கள் நோக்குகின்றோம்.

இன்று அரசாங்கம் கூடுதலான ஆசனங்களை பெறும் பட்சத்தில் கிழக்கு மாகாண மக்கள் தங்களை ஆதரிக்கின்றனர், கிழக்கு மாகாணத்தில் எதுவித பிரச்சினையும் இல்லை, அதேபோன்று வடக்கு மக்களையும் நாங்கள் சரியான முறையில் வழிநடத்திச்செல்லும்வாய்ப்பு இருக்கின்றது என்று நியாயப்படுத்தக்கூடிய, ஐ.நா அழுத்தங்களை குறைக்கக்கூடியதான நிலையை நிச்சயமாக இந்த தேர்தல் பிரதிபலிக்கும்.

எங்களுடைய கிழக்கு மாகாண மக்கள் கடந்த தேர்தல்களிலும் சரி உரிமை பிரச்சினைகளிலும் சரி உணர்வோடு, தேசியத்தோடுதான் இவ்வளவு காலமும் வாழ்ந்துவருகின்றனர். இன்றும் அதற்கான உதாரணங்கள் பலவற்றைக்கூறலாம். கடந்த தேர்தல்களில் பல அழுத்தங்கள் இருந்தும் கூட மிரட்டல்கள் இருந்தும் கூட தங்களது வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்திருந்தனர்.

இன்று அரசோடு இருக்கின்ற பிள்ளையான் போன்றவர்களுக்கும் முரளிதரன் போன்றவர்களுக்கும் இங்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. குறிப்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர ஏனைய கட்சிகளுடன் இருந்த தமிழர்கள் வெல்லப்படவில்லை. அவர்களை வெல்லவைக்க கிழக்கு மக்கள் விரும்பவில்லை. இதிலிருந்து கிழக்கு மாகாண மக்களின் உணர்வுதெட்டத்தெளிவாக தெரிகின்றது.

இதில் மிக முக்கியமாக அனைவரும் ஒற்றுமையாக வாக்களிக்கும் வீதம் கூடும்போது, அனைவரும் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் நிச்சயமாக ஆட்சியை கைப்பற்றலாம்.

இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுக்கமுழுக்க கைப்பற்ற வேண்டும் என்ற சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பானது மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. மக்கள் இரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி இந்த மக்கள் அதனை உருவாக்கியுள்ளனர். அந்த கூட்டமைப்பை மக்கள் பலப்படுத்துகின்ற, அதுசார்ந்த ஆதரவுகளை தெரிவுக்கும் நிலை இருந்தாலும் கூட கூட்டமைப்பினரும் மக்களால் மதிக்கக்கூடிய வகையில் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் இன்றைய நிலையில் அனைத்து விடயங்களையும் அறிந்துவைத்திருக்கும் நிலையில் எங்களையும் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாணம் சார்ந்த இந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

என்றைக்கும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கம்தான் மக்கள் இருக்கின்றார்கள் என்று இந்த இலங்கை அரசாங்கமும் உலக நாடுகளும் உணர்ந்துகொள்ளும் வகையில், இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே இந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்லவைக்க வேண்டிய வழியை மாற்றுக்கட்சிக்கு வாக்குகள் செல்லாமல் செய்வதன் மூலமும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிகளவாக வாக்களிப்பதன் மூலமும் வெளிப்படுத்தலாம்.

ஆகவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் நிச்சயமாக பலம்சேர்ப்பார்கள். அதன்மூலம் அரசாங்கத்துக்கு நல்ல பதிலை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .