2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டம் தேர்தல் வன்முறையின்றி அமைதியாக காட்சியளிக்கின்றது: கபே பணிப்பாளர்

Super User   / 2012 ஜூலை 24 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


மட்டக்களப்பு மாவட்டமே இதுவரை எதுவிதமான தேர்தல் வன்முறையுமற்ற மாவட்டமாக அவதானிக்கப்பட்டுள்ளது என கபே அமைப்பின் நிறைவேற்று  பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கும் கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையிடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக் காரியாலத்தில் இடம்பெற்றது.

இதன்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ,

"மட்டக்களப்பு தேர்தல் களம் மிகவும் அமைதியாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம். நான் தற்சமயம் மட்டக்களப்பில் இருக்கின்றேன்.  அதேவேளை நீண்டகாலமாக மட்டக்களப்பை அவதானித்து வந்திருக்கின்றேன். இந்த முறை பாரிய சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்து விடவில்லை. அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் நமக்கு கிடைத்திருக்கவும் இல்லை.

போலியாக அச்சுறுத்தல்கள் இருப்பதாக உருவகப்படுத்தும் போது சிலவேளை உண்மையாகவே எதுவும் நடந்து விட்டாலும் கூட அதன் பாரதூரமும் பற்றி நடவடிக்கை எடுப்பதற்கு இந்த வகை போலி புனைவுகள் தடங்கல்களை ஏற்படுத்திவிடும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுயேட்சை குழு வேட்பாளருமான தங்கேஸ்வரிக்கு ஒரு மிரட்டல் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் தங்கேஸ்வரி அரசின் ஆலோசனை படி அரசுடன் இணைந்து தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிக்க  துணை நிற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாத்திரம் தான்; கபேயிடம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முறைப்பாடாக கிடைத்துள்ளது" என்றார் கீர்த்தி தென்னகோன்.

அதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்,

"தங்களது வேட்பாளர்களுக்கும் கூட எல்ரீரீஈ யின் கடித தலைப்பில் அச்சுறுத்தல் கடிதங்களைப் பெற்றுள்ளார்கள். ஆனாலும் நாங்கள் இதை ஒரு பாரிய அச்சுறுத்தலாகக் கருதி இது பற்றி எங்குமே முறையிடவில்லை. இது தேர்தல் காலங்களில் இடம்பெறும் வழமையான மிரட்டல்கள் தான்.

என்னையும் எனது கட்சியையும் மக்களிடமிருந்து ஓரங்கட்டவே தமிழ தேசியக் கூட்டமைப்பினர் கங்கணம் கட்டி நிற்கின்றனர். ஆயினும் நான் எனது கட்சிக்காரர்களுக்கு இந்த தேர்தலில் மிகுந்த கட்டிடுப்பாட்டை கடைப்பிடித்து மிகவும் முன்மாதிரியான ஜனநாயக பண்புகளைக் காண்பிக்குமாறு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளேன்.

சுவரொட்டிகளை கூட மதில்களில் ஒட்ட வேண்டாம் என்று பணித்துள்ளேன். அதேவேளை சில ஊடகங்கள் பக்கச் சார்பாக நடந்து கொண்டு வன்முறைகள் தூண்டப்படுவதற்குக் காரணமாக செயற்படுகின்றன. எனது ஆட்சி காலத்தில் 120 பேர் கடத்தப்பட்டுள்ளதான செய்தி மற்றும் கிழக்கில் ஆயுதக் கலாசாரம் இன்னமும் இருக்கிறது என்பதான புனைவு கதைகதைகளை ஜே.வி.பியிரும் ஏனையோரும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

எங்களது மாகாணத்தில் எதுவித வன்முறைகளும் இடம்பெறாமல் தேர்தலை ஜனநாயகத்தின் வழியில் சுமுகமாக நடத்தி முடிப்பதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்" என்றார்.

இந்த சந்திப்பில் கபே அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஏ.மனாஸ் அதன் மாவட்ட கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் மற்றும்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கே. யோகவேள், கொள்கை பரப்புச் செயலாளர் ஆசாத் மௌலானா மட்டக்களப்பு மாநகர சபை பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .