2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தமிழ் மக்கள் மீண்டும் இருண்ட யுகத்துக்குள் சென்றுவிடாதபடி சிந்தித்து செயற்பட வேண்டும்: பிரதீப் மாஸ்

Menaka Mookandi   / 2012 ஜூலை 25 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்குள் சென்றுவிடாதபடி தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியில் போட்டியிடும் எட்வின் கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்ரர்) தெரிவித்தார்.

தன்னாமுனை 160 சுனாமி வீட்டுத் திட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று செவ்வாக்கிழமை மாலை நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எட்வின் கைலேஸ்வரராஜா, கோல்டன் பெஞ்சமின் உள்ளிட்டொரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

எங்களுடைய நகர்வுதான் இந்த அமைதிக்குக் காரணம், அதன் பின்னர் இரண்டு தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 2008ஆம் அண்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சரும் பல்வேறு அபிவிருத்திகளும் அதன் காரணமாகவே கிடைத்தன.

அதனைத் தொடர்ந்து பல்வேறு அபிவிருத்தி, கல்விசார் விருத்தி, பொருளாதார மேம்பாடு என பல முன்னேற்றங்கள் அதன் ஊடாகவே ஏற்பட்டன. நடந்து கொண்டிருக்கும் அபிவிருத்திகள் முன்னேற்றங்கள் தொடர்வதற்கு தமிழ் முதலமைச்சர் ஒருவரே தேவையாகும். அதனை உணர்ந்தவர்களாக தமிழ்மக்கள் வாக்குகளை வழங்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் பலரும் பலதையும் சொல்வார்கள். கிழக்கு மாகாணத்தில் மாற்றத்திற்கான காரணம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகும். அதனை யாரும் மறக்க முடியாது.

மீண்டும் போர் வெடிக்கும், குண்டு வெடிக்கும் போன்ற கருத்துக்களைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்கள். அவ்வாறான நிலைமை ஏற்படுவதனை யாரும் அனுமதிக்க முடியாது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் மீண்டும் அழிவுகளே உருவாகும். அதற்கு யாரும் அனுமதிக்கக் கூடாது.

கடந்த மாகாண சபையில் வருடத்திற்கான ஒதுக்கீடான 20 இலட்சம் ரூபாவினை நாங்கள் அடையாளம் கண்ட இடங்களுக்கும் மக்களால் குறித்துக்காட்டப்பட்ட பகுதிகளுக்கும் சமமாக ஒதுக்கீடு செய்த திருப்தியுடன், அடுத்த மாகாண சபையிலும் செயற்பட உறுதி பூண்டுள்ளோம்.

வெற்றியோ தோல்வியொ அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் என்பதுடன் மக்களுக்காக தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .