2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெற செய்வது தமிழ் மக்களின் கடமை: கூட்டமைப்பு வேட்பாளர் மகேந்திரன்

Super User   / 2012 ஜூலை 26 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

"கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது அமோக வெற்றி பெறுவது உறுதி. வெற்றியை அதிகரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் வலுவூட்டுவது தமிழ் மக்களாகிய உங்கள் கடமை"  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், பழுகாமத்தைச் சேர்ந்த முன்னாள் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளருமாகிய வி.அர்..மகேந்திரன் தெரிவித்தார்.

பழுகாமத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"அபிவிருத்தி என்ற போர்வையில் தற்போது தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுகின்றது. யார் குற்றினாலும் அரிசியாகி அபிவிருத்தி இடம்பெறுவது உண்மை. யார் குற்றினார் என்பது தேவையில்லை. ஒரு பிரதேச அபிவிருத்தி தானாகவே அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும். அபிவிருத்தியின் குறைபாடுகள் தொடர்பாக ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது அதை அரசாங்கம் முன்னெடுக்கும். தற்போது அபிவிருத்தி பற்றி கதைப்பவர்கள் பலனை எதிர்பார்த்து பிச்சை எடுப்பதற்கு சமனாகும்.

இத்தேர்தல் ஊடாக தமிழ் மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இலட்சியப் பாதை, வெளிக்காட்டப்பட வேண்டும். சாத்வீகப் போராட்டம், அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம், புரிந்துணர்வு உடன்படிக்கை, மீண்டும் யுத்தம் இவ்வாறெல்லாம் சந்தித்து முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த பயணம் இன்று பூச்சியத்திலிருந்து ஆரம்பித்து அரசியல் போராட்டமாக மாறியுள்ளது.

ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நிச்சயம் கிழக்கு மாகாண சபை  தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என்பது தத்துவம். நான் தமிழரசு கட்சியின் சார்பில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுகிறேன். கடந்த கால எனது தேர்தல் பயணத்தில் முள்நிறைந்த காட்டில் பயணித்தேன். இக்காட்டில் ரோஜா மலர் மலர்ந்து தமிழ் மக்களின் விடிவுக்கு வழிவகுக்கும் என நம்பினேன்.

இருந்த ரோஜா மலரும் வாடியதுடன் ஒவ்வொரு இதழாக உதிர்ந்து மரத்திற்கு மக்களால் தண்ணீர் ஊற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனாலேயே கடந்த கால தேர்தல் களத்தின் நினைவுகளை மறந்து, மன்னித்து, புதுயுகம் நோக்கி பயணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்னுள் புகுந்துள்ளேன்.

குறிப்பாக படுவான்கரை பிரதேசத்தின் எதிர்கால பயணம் நோக்கி சிந்திக்க வேண்டியுள்ளது. இங்குள்ள மக்கள் யுத்தம், வெள்ளம், இடம்பெயர்வு போன்ற பலவற்றை சந்தித்தனர். ஆனால், அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக தினமும் இருந்தவர்கள் யார்? தமிழ் மக்களின் ஏகோபித்த உணர்வுகளை, முடிவுகளை ஒன்றாக எடுத்துக் காட்ட இது ஓரு சந்தர்ப்பம்;. எரியும் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றி பிரகாசமாக எரிய வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

அபிவிருத்தி வேலைவாய்ப்பு என்று பொய் வேசம் போடுபவர்களின் மோகங்கள் அழிக்கப்படட்டும். பொய் வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி இடுவோம். அப்புள்ளியே தமிழ் தேசிய கூட்மைப்பிற்கு நீங்கள் தேர்தல் தினம் அன்று இடும் புள்ளியாகும்"  என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .