2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

அரபுலக வசந்தத்தின் அதிர்வுகள் கிழக்கு தேர்தலிலும் தெரிய வேண்டும்: ஹக்கீம்

Super User   / 2012 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஸரீபா)


"எகிப்து, டியூனிசியா, யேமன் ஆகிய நாடுகளில் ஆரம்பித்திருக்கும் அரபுலகின் வசந்தம் என்கிற எழுச்சி முஸ்லிம் உலகின் பார்வையை திருப்பி விட்டிருக்கிறது. அதன் தாக்கம் முஸ்லிம் உலகம் முழுவதும் அதிர தொடங்;கியுள்ளது.

அந்த அதிர்வுகள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தெரிய வேண்டும்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை பகல் ஏறாவூரில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்டுத்தும் மற்றும் பிரச்சார கூட்டம் ஏறாவூரில் இன்று வியாழக்கிழமை  நடைபெற்றது.

இப்பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில், பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், தலைமை வேட்பாளர் நசீர் அகமட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,

"அரசு, சர்வதேசம் மற்றும் தமிழ் தேசியம் ஆகியவற்றிற்கு இதன் எழுச்சியை காண்பிக்க வேண்டும். அந்த செய்தியை சொல்ல வேண்டும். அதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் சிறப்பாக செயற்பட வேண்டும்.

மக்களது முடிவே வெளிப்படையாக தெரிகின்றதாக அமைந்திருந்தது. அரசுடன் இணைந்து போட்டியிடுவது அல்லது தனித்துப் போட்டியிடுவது என்ற நிலையிலிருந்து தான் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. கடந்த தேர்தலிலும் இப்படியானதொரு அதிரடி முடிவே எடுக்கப்பட்டிருந்தது. இப்படியானதொரு முடிவை நான் கூட எதிர்பார்க்கவில்லை. ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை செய்வதன் ஊடாக பல விடயங்களை வெளிக்காட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் இறங்கி போராடினோம். இந்த தடவை மக்கள் இறங்கிப் போராட இருக்கிறார்கள். நாங்கள் யாரும் இப்போது களத்தில் இல்லையானாலும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
 
ஆனால் குழப்பக்காரர்கள் மக்களைக் குழப்புவதற்காக பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள.; பிரச்சாரங்களை செய்கிறார்கள். இவற்றையெல்லாம் முறியடித்து கிழக்கு மண்ணின் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியை பிரித்து விட முடியும் என்ற எண்ணத்தில் செய்யப்படும் பிழையான செயற்பாடுகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதனை மக்கள் செய்ய வேண்டும்.

அதற்கான ஆளணியை முஸ்லிம் காங்கிரஸ் என்கிற இயக்கம் சரியான முறையில் செயன்முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தி இந்த காலத்தினைச் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும். மர சின்னத்துக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கின்ற விசித்திரத்தினை இந்த தேர்தலில் காண்பிக்கவுள்ளோம். அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிங்கள மக்களிடமிரந்து முஸ்லிம் காங்கிரஸ் அணியை உருவாக்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறோம்.

எங்களுடைய தேர்தல் மேடைகளில் இப்போதும் பிரச்சாரம் செய்கின்றவராக பௌத்த பீடங்களில் ஒன்றான அமரபுர நிக்காயாவின் இரண்டாம் நிலை பௌத்த மதகுரு விளங்குகிறார். அவ்வாறான பௌத்த மதகுருமாரை கொண்டே இந்தப்பள்ளிவாசல்களினுள் பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விளக்கங்களை கொடுக்கவிருக்கிறோம்.

நாங்கள் அரபுலகின் வசந்தத்தின் பலத்தை எங்களுக்கு எதிரான சக்திகளு எதிராகப் பிரயோகிக்க இருக்கிறோம். மிகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.  நாங்கள் ஆட்சியை  பலவீனப்படுத்துகிற ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தவும் எங்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இத்தேர்தலை பயன்படுத்தவிருக்கிறோம்.

அரசாங்கத்துக்குள் இருக்கின்ற முஸ்லிம்களின் மனச்சாட்சி என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் அவாவுகின்றவைகளாக இருக்கிறோம். அதேநேரம் இது முஸ்லிம் காங்கிரஸுக்கு மட்டுமான தேர்தலல்ல. முழு சமூகத்துக்குமான தேர்தல் என்பதனையும் மறந்துவிட கூடாது" என்றார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் எந்த முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறமாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஓட்டமாவடி, மாவடிச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார காரியாலயம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"கடந்த மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வியூகம் அமைத்து தேர்தல் செய்து மூன்று உறுப்பினர்களை பெற்றது போல் இம்முறை பெறமுடியாது.

அதேபோன்று ஆளும் தரப்புடன் இணைந்து போட்டியிட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான ரீ.எம்.வி.பி கட்சி சார்ந்த மூன்று உறுப்பினர்களை வெள்ள வைப்பதற்கான திட்டத்தினை இம்முறை வகுத்து தேர்தல் பணிகளை செய்கின்றது.

அத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் எந்த முஸ்லிம் வேட்பாளரும் நிச்சயம் பெற முடியாது" என்றார்.







  Comments - 0

  • Kanavaan Thursday, 02 August 2012 05:35 PM

    தேர்தல்கள் வந்தாலே போதும் உரிமை, போராளி, போராட்டம் எல்லாமே வந்துவிடும். தேர்தலின் பின்னர் இவையெல்லாம் ஒரு அமைச்சர், உதவி அமைச்சர் பதவிகளோடு முடிந்துவிடும். அப்படித்தானே அமைச்சர் ஹக்கீம் அவர்களே.

    Reply : 0       0

    sharafdeen Thursday, 02 August 2012 08:17 PM

    அரசாங்கத்தின் மடியில் அமர்ந்து கொன்டு அரபு உலகின் வசந்தமா? அரபு உலகின் வசந்தங்களில் சர்வாதிகாரம் அழிக்கப்பட்டதே ஒழிய வளர்க்கப்படவில்லை ரவூப்ப் ஹகீம் அவர்களே.
    -ஒரு போராளி

    Reply : 0       0

    Nihara Friday, 03 August 2012 04:36 AM

    தொடங்கிட்டார்ரா நம்மள சுத்தி விர்றதுக்கு, இழுத்து இழுத்து யாருக்கும் புரியாத மாதிரியும் புரிஞ்ச மாதிரியும் பேசிப் பேசியே
    பதவியில தங்கிட்டிங்க, அடிக்கடி நாங்க ஜனாதிபதிக்கு விசுவாசமா இருப்பம் என்று அறிக்கை விடுறீங்க.
    எப்பதான் உங்கள நம்பி வாக்களிக்கிற மக்களுக்கு விசுவாசமா இருக்கப் போறீங்க? அரபு வசந்தம் பற்றியெல்லாம் பேசுறது உங்களுக்கு டூ மச்.

    Reply : 0       0

    saroo Friday, 03 August 2012 05:47 AM

    அரபுலக புரட்சியை இலங்கை தேர்தலோடு தொடர்புபடுத்துவது சிரிப்பாக உள்ளது.

    Reply : 0       0

    Rauf Maruthamunai Friday, 03 August 2012 06:44 AM

    நீங்களும் அமைச்சுப் பதவிக்குத்தான் அரசில் இருக்கிறீர்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .