2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

தேசத்திற்கு மகுடம் அபிவிருத்திக் கூட்டத்தை பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                       (எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் தொடர்பான அபிவிருத்திக் கூட்டத்தை பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் பகிஷ்கரித்து வெளியேறினார்.

தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வருகைதந்த பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தனது ஏறாவூர்ப் பிரதேசத்திற்கு தனது முன்மொழிவில் தீர்மானிக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக  கூறினார். இதனைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிa அவர்,  கூட்டத்தை பகிஷ்கரித்துக்கொண்டு கூட்ட மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

இது தொடர்பில் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்திடம் கேட்டபோது,

'ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவில் எனது சிபாரிசில் தீர்மானிக்கப்பட்ட தேசத்திற்கு மகுடம் திட்டத்திலான பல அபிவிருத்தித் திட்டங்கள் வேண்டுமென்று நீக்கப்பட்டுள்ளன.  இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். எனது பிரதேசத்தில் ஏறாவூர் அபிவிருத்திக்குழுவின் தலைவராக நான் இருக்கும்போது எனக்கு தெரியாமலேயே இத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரசியல்வாதிகளின் காரியாலயங்களுக்குள் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. முறையாக மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானிக்கவேண்டிய இத்திட்டங்கள் அரசியல்வாதிகளின் காரியாலயங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எனது கண்டனத்தை தெரிவித்துவிட்டு நான் இன்றைய கூட்டத்தை பகிஷ்கரித்து கூட்ட மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.

இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளேன்' என்றார்.

இருப்பினும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் மேற்கொள்ளப்படவுள்ள தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .