2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தேர்தலைக் குழப்பும் நோக்கில் இலக்கத் தகடில்லாமல் நடமாடிய முச்சக்கர வண்டிச்சாரதி கைது: டி.ஐ.ஜி. வைத்த

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.சுக்ரி)


'மட்டக்களப்பில் தேர்தலைக் குழப்பும் நோக்கில் இலக்கத் தகடில்லாத முச்சக்கரவண்டிகள் நடமாடுவதாக எங்களுக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி நாங்கள் புலனாய்வு செய்து இலக்கத் தகடில்லாது நடமாடிய முச்சக்கரவண்டியையும் அதனை ஓட்டிச்சென்ற  சாரதியையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, 20 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் சம்பந்தப்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதி விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தேர்தலைக் குழப்பும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாதெனவும்; பிரதி ஞாயிறு தோறும் அவர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிமன்றத்தால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அவரது நடமாட்டத்தை ஒரு இறுக்கமான கண்காணிப்பில் வைத்திருக்கின்றோம்' என இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.ரவீந்திர வைத்தியலங்கார தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமான சமகால நிலைமைகளை ஆராய்ந்து வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் கூட்டம் நேற்று புதன்கிழமை மட்டக்களப்புக் கச்சேரியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றபோதே பிரதி பொலிஸ் மா அதிபர் இவ்வாறு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள், மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே மற்றும் பவ்ரல் ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

சமகால நிலவரங்களைத் தொடர்ந்து விளக்கிய மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் பரிசோதகர் சட்டத்தரணி ஏ.ரவீந்திர வைத்தியலங்கார, 'இலக்கத்தகடில்லாத வாகனங்கள் நடமாடினால் அவை உடனடியாகக் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் வன்முறைகளில் யார் ஈடுபட்டாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ளவோ கண்டும் காணாமலும் இருக்கவோ யாருக்கும்  ஆதரவளிக்கமாட்டோம். நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக எமது நடவடிக்கைகள் மிகக்கடுமையானதாக இருக்கும்' என்றார்.

இந்நிகழ்வில் நடப்பு விவகாரங்களை விளக்கிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ், 'வன்முறைகளற்ற ஒரு தேர்தலை நடத்திக்காட்டவே நாங்கள் முடிந்தளவு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். பொலிஸ் அத்தியட்சகர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றார். முறைப்பாடுகள் கிடைத்த உடனேயே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வன்முறைகளற்ற தேர்தலை நடத்துவதற்கு உங்களது பொறுப்பையும் கடமையையும் மறந்து விடவேண்டாம். பொருட் சேதமோ உயிரிழப்போ இல்லாத ஒரு தேர்தலை ஜனநாயக ரீதியாக நடத்தி முடிக்க தேர்தல் திணைக்களத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் நீங்கள்தான் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.

இதுவரை மட்டக்களப்பில் கிடைக்கப்பெற்றுள்ள தேர்தல் வன்முறைகள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஏறாவூரில் 7, காத்தான்குடியில்  6, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் 4, என்ற அடிப்படையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஒன்றிரண்டு முறைப்பாடுகளே கிடைத்துள்ளன. முறைப்பாடுகளுக்கு உடனடியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அச்சுறுத்தப்பட்டமை, தாக்கப்பட்டமை, கல்வீசப்பட்டமை பற்றிய சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆனால் இதில் ஈடுபட்டவர்கள் பயணம் செய்த வாகனங்களின் இலக்கங்களை எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. அதனால் எம்மால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

எமது முறைப்பாட்டு அலுவலகங்கள் கச்சேரியிலும் வாழைச்சேனையிலும் வெல்லாவெளியிலும் உள்ளன' எனத் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .