2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கிழக்கில் போட்டியிடுவது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றவர்கள் இன்று போட்டியிடுவது ஏன்?: சந்தி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


இந்த மக்களுக்குப் பணியாற்றுவதற்கே நாம் புறப்பட்டோம். நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம். ஆனால் சம்பந்தர் மிகவும் பயந்த ஒரு கோழை. நான் ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால் சந்திரிக்கா கொண்;டுவந்த தீர்வுப் பொதியில் தமிழர்களுக்கு மிகவும் வலுவானதும் நியாயமானதுமான பல்வேறுபட்ட அதிகாரங்கள் மலிந்துகாணப்பட்டன என்று சம்பந்தர் மிக அண்மையில் ஓர் கருத்தினை வெளியிட்டிருந்தார். இப்போது கடந்துவிட்ட காலம் பற்றி கருத்துக் கூறும் இவர் எம்மக்களுக்கு உண்மையிலேயே அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்கும் எண்ணம் கொண்ட மனிதராக இருந்திருந்தால் ஏன் அன்று சந்திரிக்காவின் தீர்வுப் பொதியினை துணிந்து ஏற்கவில்லை? அது ஒரு நல்ல தீர்வு என்று கூறுபவர் அன்றே இதனைப் பொறுப்பேற்றிருக்கலாம் தானே? என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'சம்பந்தன் அன்று என்ன செய்தார்? ஐக்கிய தேசியக் கட்சியும்; ஆனந்தசங்கரியும் இணைந்து தீர்வுத்திட்ட ஆவணங்களை நாடாளுமன்றத்தில் தீயிட்டு எரித்தபோது வாயைத் திறக்காமல் அமர்ந்திருந்தார். இன்று விடுதலைப் புலிகள் மடிந்தபின்னர் சந்திரிக்காவின் தீர்வுப் பொதி அதிகாரம் மிகுந்ததாக இருந்ததாம்.  இதேபோன்றுதான் 2008இல் பிரிக்கப்பட்ட கிழக்கில் போட்டியிடுவது தமிழர்களுக்குத் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்று சொல்லிவிட்டு இன்று புலித்தலைமை மடிந்தபின்னர் என்ன கூறுகிறார்?

அதிகாரம் மிக்க முதலமைச்சரையும் கிழக்கு மாகாணசபையையும் உருவாக்க காலத்தின் கட்டாயம் கருதி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்களாம்..! அப்படி என்றால் 2008இல்  எம்மக்களுக்கு அதிகாரங்களும் தீர்வுகளும் தேவையான விடயங்களாக இருக்கவில்லையா?

இவர் கூறும் காலத்தின் கட்டாயம் அப்போது எங்கே போனது? விடுதலைப் புலிகள் இருக்கும்போது ஒருபேச்சு இறந்த பின்னர் ஒருபேச்சு. நிலையான கொள்கைகள் இல்லை. பற்றுறுதி இல்லை. அதற்குள் விடுதலைப் புலிகள் இருக்கும்போது எம்மை சுயமாக சிந்திக்கவிடவில்லை என்றும் சொல்கிறீர்கள்.

சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் எல்லாம் ஏன் ஐயா மக்களுக்காக அரசியல் செய்ய வருகிறீர்கள்? நாம் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் அல்ல கோழைகளும் அல்ல. எம்மக்களின் அழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாமலேயே சாவினைத் துச்சமென்றெண்ணி தலைமையினை ஏற்றோம். இன்னோர் சமூகத்தின் கரங்களில் பறிபோகவிருந்த மாகாணசபையினையும் கைப்பற்றினோம். கிழக்கு மண்ணின் இருப்பினைத் தக்கவைத்துக்கொண்டோம்.

நாம் கட்டிய கூட்டிலே பங்குகேட்பவர் ஒருபக்கமிருக்க இன்னுமோர் வேடிக்கையைப் பாருங்கள். களுவன்கேணிப் பிரதேசத்தில் நான் நிதி ஒதுக்கிய வீதிக்கு உரிமை கொண்டாடி மாலை மரியாதை வரவேற்புக்கள் கேட்டு ஒருவர் சென்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல பிரதி அமைச்சர் ஒருவர்தான்;. தேர்தல் காலத்தில் விளம்பரம் தேட எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள் பாருங்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .