2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

த.தே.கூ.வேட்பாளர்களை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனோ அவரின் வேட்பாளர்களோ அச்சுறுத்தவில்லை: அர

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தலில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனோ அவரின் வேட்பாளர்களோ ஈடுபடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முரன்பாடுகள் அற்ற அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதில் சிவில் சமூகத்தினருடன் இணைந்ததான அரசியல் தலைவர்களின் பெறுமதியான பங்களிப்பு என்னும்; தலைப்பிலான செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பில் உள்ள வேட்பாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களினாலும் அச்சுறுத்தல் இல்லை. குறிப்பாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினாலோ அல்லது வேட்பாளர்களினாலோ எந்தவித  அச்சுறுத்தலும் இல்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களே இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக நேரடியாகக் கண்ட எமது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் எஞ்சியுள்ள தினங்களில் இவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கை அதிகரிக்கலாம் எனவும் தேர்தல் தினத்து அன்று மக்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பது, மதுபானங்களை வாங்கிக்கொடுத்து எமது ஆதரவாளர்களை துன்புறுத்துவது போன்ற செயல்கள் இடம்பெறலாம் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

நிச்சயமாக இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெறும். அந்த வெற்றியை பொறுக்க முடியாத இவர்கள் தேர்தல் தினத்தின் பின்னரும் வன்முறையைத் தூண்ட திட்டமிட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.
தேர்தலுக்கு மட்டும் கண்கானிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் தேர்தலின் பின்னரும் கண்கானிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

இனங்காணப்பட்ட வெல்லாவெளி, கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, வாகரை, கதிரவெளி போன்ற பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்படும் நடவடிக்கைகள் கூடுதலாக இருக்கும். இங்கு உங்களின் கண்காணிப்பு நடவடிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான அச்சுறுத்தல் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்றபோதும் அதற்கு முன்னரும் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

அதேபோன்று கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்; செய்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் எமது தலைமை வேட்பாளரின் வீட்டுக்கதவுகளுக்கு பூட்டுப்போடப்பட்டு அச்சுறுத்தல் வன்முறை இவ்வாறு தொடர்ந்துகொண்டிருக்கின்றது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .