2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

கிழக்கு தேர்தலில் தமிழர் வாக்களிப்பை சிதறடிக்க நோக்கில் ஆளும்தரப்பு சகல சாதனைகளையும் நிகழ்த்துகிறது:

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

'கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர் வாக்களிப்பை சிதறடிக்கும் நோக்கில் ஆளும்தரப்பு சகலவிதமான சாதனைகளையும் தேர்தல் களத்தில் நிகழ்த்தி வருகின்றது. சலுகைகள், மிரட்டல்கள், தாக்குதல்கள் பிரித்தாளும் தந்திரங்கள் அனைத்தும் இந்தக் களத்தில் பிரயோகிக்கப்படுகின்றன' என்று கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போண்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'உரிமையா? சலுகையா? என்ற தமிழ்மக்களின் அறுபத்திரண்டு ஆண்டுகால ஜீவமரணப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில், இலங்கை தமிழர்கள் கிழக்கின் பெரும்பான்மையினர் இல்லை என்பதை நிரூபிக்கவும் கிழக்குத் தமிழர்கள் சிங்கள அரசுடன் ஆட்சியைப் பகிர்ந்து சகல உரிமைகளையும் பெற்று ஐக்கியத்துடன் வாழ்கிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்கவும் அரசு முயற்சிக்கின்றது.
 
சர்வதேசமும், புலம்பெயர்ந்த தமிழரும் கூறுவது போல் இங்கு இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்பதை வெளிப்படுத்தி கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை அமுல்படுத்தாது தட்டிக் கழித்து விட்டு வடமாகாணத்தில் உள்ளவர்கள் தான் பிரச்சினை என வெளிப்படுத்தி அரைகுறை தீர்வொன்றை திணித்து சர்வதேச அளுத்தத்திலிருந்தும் மனிதஉரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளவும் அரசு பகிரதப் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளது.

எனவே கிழக்குத் தமிழர்கள் விழிப்போடு இருந்து தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து சர்வதேசத்திற்கு தமது பிரச்சினைகளையும் தேவைகளையும் தெளிவுபடுத்த சரியான முறையில் வாக்களிப்பில் கலந்து தமிழர் தம் உரிமையை பாதுகாக்க வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தை நாம் தவற விடுவோமானால் நாம் அறுபத்திரெண்டு ஆண்டுகாலம் பட்ட துயரங்கள், துன்பங்கள், வேதனைகள் அனைத்தும் வெண்ணை திரண்டுவரும் போது தாழியுடைந்த கதைபோல் ஆகிவிடுவோம்.

போராடாதவரும் அரைகுறை போராட்டவாதிகளும் மட்டக்களப்பின் மஹிந்தர்களாக தம்மைத்தாமே பிரகடனப்படுத்தி தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வாக்குவீதத்தை சிதறடிக்க சுய இச்சைகளை களத்தில் பல இலட்சங்களை, வாங்கி சலுகைகளுக்கு விலைபோகின்றனர்.

எட்டப்ப சமூதாயத்தின் அடிவருடிகளாய் ஆளும்தரப்பிற்கு ஆளவட்டம் பிடிக்கும் தமிழின விரோதிகளை தோற்கடித்து கிழக்கு மண்ணிலிருந்து தமது கையாலாகாத அரசியல் அராஜகம் நடத்தும் இந்தத் துரியோதனர்களை இந்த வாக்குப் பலத்தின் மூலம் தோற்கடித்து அவர்களது அரசியல் வங்குரோத்துத்தனத்தை முடிவிற்குகொண்டு வருவோம்.

எனவே இத்தேர்தல் கிழக்குத் தமிழரின் இருப்பிற்கான தேர்தல் எமது அடிவயிற்றில் சிங்கள அரசு சகலவிதத்திலும் கைவைத்துள்ளது. அதிலிருந்து
எம்மை சாத்வீக ரீதியாக தற்காத்துக்கொள்ள நாம் சந்திக்கும் தேர்தல் என்பன நாம் ஒவ்வொருவரும் மனதில் நிலை நிறுத்தி எமது வாக்களிப்பு வீதத்தை உறுதிப்படுத்தி எமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையினை உயர்த்துவோம்.

எனவே மட்டக்களப்பு தமிழ் வாக்காளப் பெருமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் இழந்துபோனதேசியத்தை மீண்டும் கட்டியெழப்ப ஒண்றிணைந்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிப்போம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .