2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மாகாண சபையை பிள்ளையானால் நிர்வகிக்க முடியுமா என கூட்டமைப்பினர் கேலி செய்தனர்: சந்திரகாந்தன்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

 'நாம் துணிந்து பொறுப்பேற்று மாகாணசபையினைக் கைப்பற்றிய பின்னர் எத்தனை கதையாடல்கள் செய்தார்கள்? முஸ்லிம்கள், சிங்களவர்கள் அடங்கிய மாகாணம் இது. பிள்ளையானால் இதனை நிர்வகிக்க முடியுமா?, அவரால் இதனை ஆட்சி செய்ய முடியுமா என்றெல்லாம்  இந்தக் கூட்டமைப்பினர் கேலி செய்தார்கள், கூச்சலிட்டார்கள்' என கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின்; முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.

கல்லடி பேச்சியம்மன் ஆலய முன்றலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஆனால் அதையெல்லாம் தாண்டி 'எங்கள் மக்கள் மீதிருந்த பற்றும், இந்த மண்ணை எப்படியெல்லாம் கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், எங்களுக்கு இயல்பாகவே இருந்த மன உறுதியும்தான் இவற்றையெல்லாம் மாற்றிக் காட்டியது. எங்களைச் சிறப்பாக வழிநடத்தியது.

நாங்கள் போட்ட பாதையிலே வந்து எங்களுக்கெதிரான அரசியல் பற்றிப் பேசுகிறார்கள். நாங்கள் போட்ட காப்பற் வீதி, கொங்கிறீட் வீதி  பற்றிச் சொல்லவில்லை. நாம் தான் கிழக்கு மாகாண சபைக்கு பாதை போட்டோம். நாங்கள் திறந்து வைத்த அரசியல் பாதை அது.

எத்தனை அரசியல் தலைவர்கள் இன்று கிழக்கு நோக்கிப் படையெடுக்கிறார்கள். எங்கள் மக்கள் துன்பப்படும் போதெல்லாம் இவர்கள் எங்கிருந்தார்கள்? இப்போது வந்து நாம் கட்டிய கூட்டைக் கலைக்க வாக்குக் கேட்கிறார்கள்.

எங்கிருந்தோ வரும் கூட்டத்திற்குத் தேசியம் பற்றி என்ன தெரியும்? இந்த அழகிய மண்ணைப் பற்றி என்ன தெரியும்? நீண்டு பரந்து கிடக்கின்ற கடல், எத்தனை குளங்கள்? ஆதரிக்கும் மனப்பாங்கு கொண்ட அன்பான மக்கள். இந்த மண்ணையும், மக்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இவர்கள் ஆங்கிலேயர் காலம், ஜீ.ஜீயின் காலம், தந்தை செல்வாவின் காலம் என்றெல்லாம் பேசினார்கள்.

இப்படிப் பேசுகிறவர்கள், இந்த மண்ணில் ஏதாவது நிம்மதி கொண்டு வந்தார்களா? சமஷ்டி பெற்றுத் தந்தார்களா? ஈழம் பெற்றுத் தந்தார்களா? இப்படி எதையுமே செய்யாத இவர்களுக்கு ஏன் நாம் வாக்களிக்க வேண்டும்?

எத்தனை தலைவர்கள் தமிழ்த் தேசியம் என்று சொல்லி யாழ்ப்பாணத்தில் உருவானார்கள்? புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், 3 ஸ்டார், 4 ஸ்டார் என்று எத்தனை ஸ்டார்கள்? எங்கள் கிழக்கு இளைஞர்களும் உங்களை நம்பித்தானே வந்தார்கள். ஆனால் உங்களுக்குள் அதிகாரப் போட்டி, தலைமைத்துவப் போட்டி, சகோதரப் படுகொலைகள், இந்திய இராணுவம் 1989களில் எம் மண்ணை விட்டு வெளியேறும் போது எத்தனை உடல்கள் உன்னிச்சைக் குளத்தில் மிதந்தது. சத்துருக்கொண்டானிலே எத்தனை சடலங்கள், மட்டக்களப்பு மாநகரசபை வண்டிகளில்தான் உடல்களை அங்கும், இங்குமாக ஏற்றி அடக்கம் செய்தார்கள். எமது இளைஞர்களது உடல்களை நரியும், நாயும், காகங்களும், கழுகுகளுமாகக் கொத்தி இழுத்துத் தின்று தீர்த்தன.

இந்த சந்தர்ப்பங்களின் போதெல்லாம் சிந்தனை கொண்ட தலைவர்கள் எடுத்த எல்லா முடிவுகளும் பிழைத்தது. கிடைத்தவை எல்லாம் வெட்டும், குத்தும், அடியும், உதையும் தான். வேறு ஒன்றுமே பெற்றுத் தரவில்லை. குள்ள நரிகளைவிட மோசமான கூட்டம்.

1977ல் இவர்கள் என்ன சொல்லி வாக்கு கேட்டார்கள்? 'ஈழத்திற்கான ஆணை கேட்டு நாடாளுமன்றத்தை தமிழீழம் பெற்றுத் தருவதற்கான மேடையாகப் பயன்படுத்துவோம்' என்றார்கள்.

'நீங்கள் சூரியன் சின்னத்திற்கு இடுகின்ற ஒவ்வொரு புள்ளடிகளும் சிங்களவர் மொட்டைகளில் விழுகின்ற பொல்லடிகள்' என்றார்கள்.

யாருக்குப் பொல்லடிகள் விழுந்தது? யாருடைய மண்டைகள் உடைந்தன? யாருக்குக் கை போனது? யாருக்குக் கால் போனது? யாருடைய உயிர்கள் பறிக்கப்பட்டன? வீடிழந்தோம், காடுகளுக்குச் சென்றோம், பொருளாதாரம் சரிந்தது, கல்வி கனவாகிப் போனது, மீன்பாடும் தேனாடு வரண்டே போனது. இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு? இவற்றையெல்லாம் தேடித் தந்தவர்கள் யார்? நாங்களா இந்த மண்ணுக்குத் துரோகம் செய்தோம்? நாங்களா இந்த முடிவுகளை எடுத்தோம்?

இல்லை, இல்லவே இல்லை. நாங்களெல்லாம் தமிழரசுக் கட்சிக்கும், சூரியனுக்கும் வாக்களித்த கூட்டம் அல்லது இவர்கள் கூப்பிட்ட போதெல்லாம் ஓடிச் சென்று இவர்களுக்குக் காவல் பார்த்து, பதுங்கு குழிகள் வெட்டி இவர்களையெல்லாம் வாழ வைத்த கூட்டம்.

இந்த யாழ். மேலாதிக்கத் தலைவர்கள் எடுத்த எந்த முடிவுகளும் நிலைத்ததில்லை. 2008ல் நாம் துணிந்து எடுத்த முடிவு தான் நிலைத்தது. இந்த மண்ணில் அமைதி வந்தது, சமாதானம் நிலைத்தது.

நாங்கள் தான் எமது தேசியத்தை கட்டியெழுப்பினோம். எமது எல்லைகளைப் பாதுகாத்தோம், அபிவிருத்தியைக் கொண்டு வந்தோம்.

லண்டன், கனடா, இந்தியாவிலே மனைவி, பிள்ளைகள், ஏன் பேரக் குழந்தைகளும் கூட வெளிநாடுகளில் தான் இருக்கிறார்கள். ஆனால் இங்கே வந்து சிங்களவர் எல்லைகளைப் பிடிக்கிறார்கள் என்கிறார்கள்?

எல்லைக் கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகளையும், அபிவிருத்திகளையும் செய்து கொடுக்காவிட்டால் யார் அங்கே போய் வாழ்வார்கள்?

அரியநேந்திரன் போய்த் தாந்தாவில் குடும்பத்துடன் குடியேறுவாரா? சம்பந்தன் சென்று எல்லைக் கிராமத்தில் தனது வீட்டைக் கட்டுவாரா? 20 வருடங்கள் லண்டனில் இருந்து விட்டு வந்த ஜனா, குடும்பத்துடன் எல்லைக் கிராமத்தைச் பாதுகாக்கத் தயாரா? யார் செய்வது?

அங்கே எல்லைகளில் இருக்கின்ற ஏழைகளும், விவசாயிகளும், மீனவர்களும் தான் எல்லையைப் பாதுகாக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவை குளம், அவர்களுக்குத் தேவை மின்சாரம், அவர்களுடைய குழந்தைகள் கல்வி கற்க வேண்டும். இவற்றைப் பற்றிச் சிந்திப்பது யார்? எல்லை காக்கும் மக்களைக் காப்பவர்கள் யார்? யாரிடம் இங்கு தேச நலன் இருக்கிறது.
1977ம் ஆண்டு தனிநாட்டு தீர்மானம் எடுத்தவனுடைய பிள்ளைகளெல்லாம் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல, எங்களுடைய பிள்ளைகளெல்லாம் மடிந்தார்கள். ஆகவே தான் சொல்கிறேன், நாங்கள் தான் இந்த மண்ணைப் பாதுகாத்தோம், கட்டியெழுப்பப் பாடுபட்டோம்.

2016இல் கிழக்கினைக் கல்வியின் உச்ச நிலைக்குக் கொண்டு செல்வோம். தொழிற்கல்வி, உயர் கல்வி எல்லாவற்றிலும் முன்னேற்றம் கொண்டு வருவோம். கிழக்கிலே 43000 குடிசைகள் இருக்கிறது. அடுத்த ஆட்சிக் காலத்தில் குடிசைகளற்ற கிழக்கினை உருவாக்கிக் காட்டுவேன். விவசாய, தானிய உற்பத்திகளை பன்மடங்காக அதிகரிப்போம். எம்மிடம் திட்டம் இருக்கிறது.

குருநாதனிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? ஜனாவிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? சம்பந்தர் வந்து மக்கள் நலன் சார்ந்து ஏதாவது பேசினாரா? ஒன்றுமே இல்லையே.

மீண்டும் வந்து சர்வதேசம் என்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ்பவர்கள், நாங்கள் தான் இந்த மண்ணில் வாழ்ந்து மடிகின்ற மக்கள், உங்களுடன் சேர்ந்து தான் நானும் மடிவேன் அது நிச்சயம்.

இன உணர்வினை வைத்து அரசியல் செய்யும் இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள். நான் இயக்கத்திற்குச் செல்லும் போது கூறினார்கள், 'இதோ தமிழீழம், நாளை தமிழீழம் வாருங்கள், வாருங்கள், பார்வையாளர்களாக இருக்காதீர்கள், பங்காளர்களாக மாறுங்கள்' என்றார்கள், பின்னர் வட தமிழீழம் மீட்போம் புறப்படுங்கள் என்றார்கள், ஆயிரக் கணக்காகச் சென்ற நாம் திரும்பும் போது நாற்பதும், ஐம்பதுமாகவே திரும்பினோம்....

இராஜ தந்திரம் பேசுவார்கள் பாருங்கள் எப்படியென்று. டெல்லி அழைக்கிறது, வெள்ளை மாளிகை அழைக்கிறது என்று. முடிந்தால் காட்டட்டும் அமெரிக்கச் வெளியுறவுச் செயலாளர் அனுப்பிய அழைப்புக் கடிதத்தை அல்லது இந்திய வெளியுறவுத் துறையினர் அனுப்பிய கடிதத்தினை முடிந்தால் நாளையே ஊடகங்களில் வெளியிடட்டும்.

இருபது இலட்சம் பணம்இருந்தால் யார் வேண்டுமானாலும் அமெரிக்கச் சுற்றுப்பயணம் செய்துவிட்டு வெள்ளை மாளிகை முன்னால் புகைப்படம் எடுத்து விட்டு வர முடியும். இவர்களது இராஜ தந்திரம் எல்லாம் எமக்குத் தெரியும்.

எவ்வளவு வளமிருந்தும் மூன்றுவேளை சாப்பிட உணவின்றி மக்கள் இருக்கிறார்கள். அண்மையில் நான் வவுணதீவுக் காயான்மடு பகுதிக்குச் சென்றிருந்தேன். ஓர் ஆலயத்தினைப் பார்த்து விட்டு திரும்பிப் பார்த்தேன்.

ஓர் வரம்பினால் ஓர் தாயும், இரு பிள்ளைகளும் நடந்து வந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரத்திலே அந்தப் பிள்ளை மயங்கி விழுந்தது. தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டார்கள். 'என்னம்மா நடந்தது என்று கேட்டதற்குப் பதில் வந்தது. 'உங்களைப் பார்க்க வந்தது சேர், ஓடி வந்ததில் கொஞ்சம் களைப்பாகி விட்டது' என்று கூறினார், எனது கணவர் இறந்து விட்டார், பிள்ளைகள் இருவரையும் வளர்க்க மிகவும் கஸ்டமாக இருக்கிறது, சாதாரண தரம் வரை படிக்க வைத்திருக்கிறேன் என்றார். நான் உண்மையை சொல்லு மகள் சாப்பிடவில்லையா என்று கேட்டேன்.

ஆம், நான் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை என்று கூறினார். அந்தப் பதிலைக் கேட்க மிகவும் மனக் கஸ்டமாக இருந்தது, நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்து விட்டுத் திரும்பினேன். அன்று நித்திரைக்குச் செல்லும் வரை அந்த சம்பவத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தேன். மனம் ஆறுதல் அடையவே இல்லை. ஒருவரைத் தான் நான் கண்டேன். ஆனால் இப்படி எத்தனை பேர் இருப்பார்கள்? இதற்கு யார் முடிவு கொடுப்பார்கள்?

துப்பாக்கி வாங்கிக் கொடுக்கும் நாடு கடந்த தமிழன் இந்தப்  பிள்ளைகளின் வேலை வாய்ப்புக்காக இங்கு ஓர் தொழிற்சாலை அமைத்துக் கொடுப்பானா? அல்லது மாவீரனின் ஆத்மா சாந்திக்கு வாக்களியுங்கள் என்று கேட்பவர்கள் நிதியினைத் திரட்டி இந்த மாவீரர் குடும்பங்களுக்கு உதவி செய்வார்களா? ஏதாவது நடந்ததா? ஏதாவது நடக்குமா?

வடக்கு அழிகிறது எங்கு பார்த்தாலும் காவலரண்கள், சமூக சீரழிவு, தற்கொலை, சிறுவர் துஷ்பிரயோகம் அதனை பார்க்க முடியாது. எமது மண்ணில் வந்து வீராப்புப் பேசுகிறார்கள். மக்கள் தெளிவாக இருங்கள், உங்களுக்காக இருப்பதும் நாம் தான், இறக்கப் போவதும் நாம் தான்' என்று கூறினார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .