2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

அமைச்சுப் பதவிக்காகவும், சலுகைக்காகவும் அரசாங்கத்துக்கு மு.கா துணை போகக்கூடாது: நல்லாட்சிக்கான மக்கள

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

அமைச்சுப் பதவிகளுக்காகவும், இன்னும் சில சலுகைகளுக்காகவும் அரசாங்கம் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணை போகக் கூடாது' என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கிழக்கு மாகாணத்திலும் நாமே ஆட்சியமைப்போம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடித்துச் சொல்லியிருப்பதில் இருந்து, ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் ஆதரவு அரசாங்கத்திற்கே கிடைக்கும் என்பது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.

கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ.ல.மு.காங்கிரஸானது அரசாங்கத்தின் காட்டமான விமர்சனங்களுக்கு மத்தியிலும், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட சக முஸ்லிம் கட்சித் தலைவர்களின் அடாவடித்தனங்கள் மற்றும் அவதூறுகளுக்கு மத்தியிலும் தாக்குப் பிடித்து கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைப் பெருவாரியாகப்பெற்று கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக மாறியுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீ.ல.மு.காவை தம்முடன் இணைந்து மாகாண அரசை ஸ்தாபிக்க முன்வருமாறு அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பரஸ்பரம் அழைப்பு விடுத்து வருகின்றனர். அத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மு.கா.வுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இது, மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மு.காவுக்கு கிடைத்திருக்கும் அரியதொரு பேரம் பேசும் வலுவாகும். இதனை மு.கா. தலைமையும் அதன் அரசியல் அதியுயர்பீடமும் எவ்வாறு கையாண்டு முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தையும், உரிமைகளையும் இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டும் என்பதில் அனைத்துத் தரப்பினருமே அக்கறை கொண்டிருக்கின்றனர்.

ஸ்ரீ.ல.மு.கா. 2008இல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல், பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், 2010இல் நடைபெற்ற பொதுத் தேர்தல் போன்ற தேர்தல்களில் எல்லாம் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. அப்போதெல்லாம் அக்கட்சிக்கு இத்தகைய ஒரு பேரம் பேசும் வலு கிடைத்திருக்கவில்லை.

அரசாங்கம் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற முயன்றபோது அதற்கு ஸ்ரீ.ல.மு.கா.வின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது அரசாங்கத்துடன் பேரம் பேசி முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் நம் நாட்டின் ஏனைய பொதுப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான முதலாவது சந்தர்ப்பம் மு.கா.வுக்கு கிடைத்திருந்தது.

ஆயினும், மு.கா. தலைமை முஸ்லிம் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டு முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி அரசுடன் பேசித் தீர்வினைப் பெற முயற்சிக்காமல் கட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி 18ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்ற வழி வகுத்தார்.

இத்திருத்தச் சட்டமூலம் நிறைவேறியதன் மூலம் இந்நாட்டில் நல்லாட்சி நிர்வாகத்திற்காக எஞ்சியிருந்த ஒரு சில அத்திவாரங்களும் இல்லாமலானது. மாத்திரமின்றி அந்த 18ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் கிடைத்திருக்கும் மிதமிஞ்சிய அதிகாரமே நம் சமூகம் எதிர்கொள்கின்ற பல்வறு பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் அடிப்படைக் காரணமாக மாறியிருக்கின்றன.

இம்முறை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட வேளை அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற முறையில் ஆதரவு வழங்கி அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டிருந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுக்கு அரசாங்கத்துடன் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகள் குறித்து பேரம் பேசுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தது.

ஆயினும் அதுபற்றியெல்லாம் அரசாங்கத்துடன் பேசாமல் வெறுமனே தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீடுகள் குறித்தே மு.கா. அரச தரப்புடன் இறுதி நேரம்வரை பேசியது. இறுதியில் அம்பாறை மாவட்டத்தில் தாம் எதிர்பார்த்த ஆசன ஒதுக்கீடு கிடைக்காது போனதால் இத்தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிட்டது.

இவ்வாறு மு.கா. தனித்துப் போட்டியிட்ட போதிலும் தமது கட்சி அரசாங்கத்திற்கு விசுவாசமாகவே செயற்படும் என்று மு.கா. தலைவர் தெளிவாகக் கூறியிருந்தார். அரசாங்கமும் அவ்வாறே மு.கா. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்று கூறி வந்தது.

என்றாலும் தேர்தல் வெற்றிக்காகவும், அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்துள்ள கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை ஒன்று திரட்டிப் பெற வேண்டும் என்பதற்காகவும் மு.கா.வின் பிரச்சார மேடைகள் அரசுக்கு விரோதமான தோற்றப்பாட்டைக் கொண்டிருந்தன. மு.கா. தவிசாளர் தனது பிரதியமைச்சுப் பதவியைக்கூட ராஜினாமாச் செய்து முஸ்லிம்களின்
செல்வாக்கைப் பெற்றுக் கொடுப்பதற்குத் துணிந்திருந்தார்' என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .