2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கட்சி மாநாடு தேவைதானா?: அஸாத் சாலி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

வடக்கும் கிழக்கும் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கட்சி மாநாடு தேவைதானா? என கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும், முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவருமான அஸாத் ஸாலி கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாளை தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் கூட்டவுள்ள தனது வருடாந்த மாநாட்டை பின்போட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் கோட்டை எனக் கருதிக்கொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசார காலத்தில் அது மக்களுக்கு அளித்த வாக்குறுதி அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவடைந்ததும் அந்த வாக்குறுதிகளை மீறி அது கிழக்கு மாகாண மக்களுக்கு இழைத்த துரோகம் என்பன தான் இதற்கு முக்கிய காரணம்.

வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு தனது கோட்டையிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் வருடாந்த மாநாட்டை கொழும்பில் நடத்த முடிவு செய்துள்ளமை மிகவும் கவலைக்குரியது. கிழக்கு மாகாணத்தில் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் படாதபாடு படுவதையே இந்த நகர்வு உணர்த்துகின்றது.

வட மாகாணத்திலும் கிழக்கு மாணானத்திலும் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல கிராமங்களுக்கு இன்னமும் செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் சார்பாகவோ அல்லது அதன் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சார்பாகவோ இது வரை எந்த நிவாரணமும் சென்றடைந்ததாக எந்தத் தகவலும் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகக் கூட கேள்விப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோ உலகம் சுற்றி விட்டு இப்போதுதான் ஊர் திரும்பியுள்ளார்.

நாட்டின் ஒரு பகுதி குறிப்பாக வடக்கும் கிழக்கும் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில் கட்சி மாநாடு தேவைதானா என அப்பாவி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்தக் கட்சி மாநாட்டுக்காக கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான டிக்கட்டுக்கள் கூட அவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தமது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களின் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களும் நடந்து கொள்ளும் விதம் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனது மக்களுக்கான நிவாரணங்களை உரிய முறையில் வழங்கும் வகையில் பாதிக்கப்பட்ட இடங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்படவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸோ வெள்ளத்தில் நீந்தியாவது கொழும்புக்கு மாநாட்டுக்கு வாருங்கள் என்று மக்களுக்கு கட்டளைப் பிறப்பித்துள்ளது. இது மக்களைப் பற்றிய கட்சித் தலைமையின் பொடுபோக்குத் தனத்தையும, அலட்சியப் பேக்கையுமே சித்தரிக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனான தனது செல்வாக்கை முழுமையாகப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் எந்த விதமான பாரபட்சமும் இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆரம்பத்திலேயே நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்ததாக எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில் மீண்டும் அதே கோரிக்கையை தான் நாம் முன்வைக்கின்றோம்.

இனிமேலும் தாமதிக்காமல் வருடாந்த மாநாட்டை பின்போட்டு விட்டு முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் யாவரும் தத்தமது சொந்த இடங்களுக்குச் சென்று நொந்து கெட்டுப் போயுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு அரசின் மூலம் நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக அவர்கள் தமது அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மாநாட்டுக்காக செலவிடப்படவுள்ள இலட்சக் கணக்கான ரூபா பணத்தை உடனடியாக மக்கள் நிவாரணத்துக்கான தனது பங்காக முஸ்லிம் காங்கிரஸ் திசை திருப்பவேண்டும்.

தற்போதைய சீறற்ற காலநிலை மேலும் நீடிக்கலாம் என எதிர்வுகள் கூறப்பட்டுள்ள நிலையில் நாடு ஒரு மாபெரும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள சூழலில் கட்சி மாநாடு போன்ற களியாட்டஙகளை நடத்துவது வடக்கு கிழக்கில் வாழும் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமன்றி பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியும் அவமானமும் ஆகும் என்பதை நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றோம்.

இதையும் மீறி மக்களுக்கு அநீதி இழைப்பது எமக்கொன்றும் புதிய விடயமல்ல அது எமக்கு கைவந்த கலை எனக் கருதி கொழும்பில் நாளை மாநாட்டை நடத்தினால் சம்பந்தப்பட்ட எல்லோரும் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த சாபத்துக்கு ஆளாவார்கள் என்பது நிச்சயம்."

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .