2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலய மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 02 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலய மாணவர்கள் இன்று காலை பாடசாலை பகிஷ்கரிப்பிலும் ஆர்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.

சுனாமி அனர்தத்தினால் சேதமடைந்த இந்த பாடசாலை கட்டிடம் நோர்வே நாட்டு நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்டு இப்பாடசாலைக்கு 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டு அக்கட்டிடத்தில் இப்பாடசாலை இயங்கி வந்ததது.

இந் நிலையில் இந்த பாடசாலையின் புதிய கட்டிடம் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற்பயிற்சி நடவடிக்கைகளுக்காக 2009ஆம் ஆண்டு தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு வழங்கப்பட்டதால் இந்த றிஷ்வி நகர் அல் இக்பால் வித்தியாலயம் அதன் பழைய கட்டிடத்தில் சிரமத்திற்கு மத்தியில் இயங்கி வந்த நிலையில் தமக்குரிய அப்பாடசாலையின் புதிய கட்டிடத்தை தமக்கு வழங்க வேண்டும் எனக்கேட்டு இம்மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் பாடசாலை பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டனர்.

இன்று காலையில் பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள் பாடசாலைக்கு முன்பாகவுள்ள வீதியில் அமர்ந்திருந்தும் சில மாணவர்கள் சுலோகங்களை தாங்கியும் ஆர்;பபாட்டத்தில் ஈடுபட்டனர்.

வலயக் கல்விப்பணிப்பாளரே எங்களுக்கான புதிய கட்டிடத்தை மீட்டுத்தாருங்கள், எங்களை நுளம்பிலிருந்து காப்பாற்ற உதவுங்கள், சறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சரே சிறுவர்களாகிய எங்களின் கல்வியை தொடர உதவுங்கள் 2007இல் எங்களுக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை 2013 வரை எங்களுக்காக ஒப்படைக்கவில்லை போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இம்மாணவர்கள் தாங்கி நின்றனர்.

இம்மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை பெற்றார்களும் இணைந்திருந்தனர். இங்கு வருகை தந்த காத்தான்குடி பொலிசாரும் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொடர்பு கிடைக்க வில்லை.

இப்பாடசாலை கட்டிடம் 2009இல் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முய்றிசியினால் உள்வாங்கப்பட்டு அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .