2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

வறுமை நிரந்தரமான ஒன்றல்ல: சிவநேசத்துரை சந்திரகாந்தன்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 20 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி,-ரி.லோஹித்

வறுமையென்பது நிரந்தரமானதொன்றல்ல. அதனை இலகுவாக எம்மால் இல்லாதொழிக்க முடியும். அவ்வாறெனில் வறுமை நிலையிலுள்ளவர்கள் அது தொடர்பில் அதிக தெளிவை பெற்றிருக்க வேண்டும். அதற்காகவே இது போன்ற செயலமர்வுகள் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவென மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான  சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கான திவிநெகும தொடர்பிலான விளக்கச் செயலமர்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'தனிநபர் வருமானத்தை அதிகரிக்கச் செய்து மனைப் பொருளாதார அலகுகளை விருத்தி செய்து வறுமையை ஒழிக்கின்ற ஓர் விசேட கருத்திட்டத்தின் உதயமே திவிநெகும ஆகும். இதனூடாக எமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அறிவுறுத்தல்களை செவ்வனே நிறைவேற்றுவதன் மூலம் சிறப்பாக எமது இலக்கை அடைய முடியும்.

2013ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தினை எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  முன்வைக்கின்றபோது, எமது இலங்கை தேசத்தை ஆட்கொண்டிருக்கின்ற வறுமை என்கின்ற பிணியை அடியோடு ஒழிப்பதற்காக ஓர் புதிய  திட்டத்தினை அறிமுகம் செய்தார். அது இன்று பொருளாதார அமைச்சின் நேரடி வழிகாட்டலின் கீழ் நல்லதோர் வறுமை ஒழிப்பு செயற்றிட்டமாக நாட்டின் பல பாகங்களிலும் வியாபித்திருக்கின்றது. இது தொடர்பில் எமது மாவட்ட மக்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும். காரணம் என்னவெனில் அண்மைய ஓர் தரவின்படி மட்டக்களப்பு மாவட்டம்தான் வறுமையிலே முதன்மை பெறுகிறது என்கின்ற அதிர்ச்சி தகவல் இருக்கிறது.

எனவே பசிப்பவனுக்குத்தான் உணவு தேவை என்பது போல் எமது மாவட்டத்திற்குத்தான் வறுமை ஒழிப்பு அவசியம் தேவை. எனவே மாவட்டத்தின் முக்கிய காரணகர்த்தாக்களாக இங்கு கூடியிருக்கின்ற நாங்கள் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும். இத்திட்டம் முழுமையாக வெற்றி பெறுவது எமது கையிலே தங்கி இருக்கிறது. ஆகவே நாங்கள் அனைவரும் தேவை உணர்ந்து எமது சேவைகளை வழங்குவதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திலே வறுமை என்கின்ற பெரும் நோயை இலகுவில் இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கை இன்றுடன் எல்லோரது மனங்களிலும் உதயமாக வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுங்செழியன், மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், மாநகர ஆணையாளர் சிவநாதன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .