2026 மே 04, திங்கட்கிழமை

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படாது: மட்டு. அரச அதிபர்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கப்படமாட்டாது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியது. இந்தக் கலந்துரையாடலில்  கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனக் கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை  இந்த சந்திப்பு நடைபெற்றது.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

'நான் ஏற்கெனவே வவுனியா மாவட்டத்தில் அரசாங்க அதிபராக கடமையாற்றியுள்ளேன். அதேபோன்று இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபராக கடமையாற்றுகின்றேன். நான் கடமையாற்றிய மாவட்டத்திலும் சரி, தற்போது கடமையாற்றும் இந்த மாவட்டத்திலும் சரி சிறுபான்மை சமூகங்களின் குரலுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்துள்ளேன். அந்த வகையில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கும் குரலுக்கும் மதிப்பளிக்கப்படுகின்றன.

நான் மனச்சாட்சியின்படி செயற்படுகின்றேன். நான் வவுனியாவுக்கு செல்லும் வழியில் வவுனியா மாவட்டத்திலுள்ள உலமாக்களை சந்திப்பேன் அவர்கள் என்னுடன் கதைப்பார்கள். அவ்வாறு வவுனியாவில் முஸ்லிம்களுக்கும் எனக்குமிடையில் உறவு இருக்கின்றது. வடக்கிலுள்ள தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா மெனிக்பாமில் இருந்தபோது காத்தான்குடி முஸ்லிம்கள் அங்கு வந்து உதவி செய்தார்கள். அதை நான் இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன்.

அதற்காக நான் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் குறுகிய நிலப்பரப்புக்குள் வாழ்கின்றனர்.

இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்தக்காணியில் மீளக்குடியமர்வதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது. அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தியுள்ளது.  மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிதாக மழை பெய்தாலும் வெள்ளத்திற்கு முகம் கொடுக்கின்றோம். இதனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றோம். மாவட்டத்தில் வெள்ளநீரை வடிந்தோடச்செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளநீர் கடலுக்கோ அல்லது வாவிகளுக்கோ வடிந்து ஓடக்கூடிய தோணாக்கால்வாய்களை சிலர் அத்துமீறி பிடித்து சட்டவிரோதமாக அதில் கட்டிடங்களையும் கட்டி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர்களிடம் அறிக்கையை கேட்டுள்ளேன். இதுவரையில் 11 பிரதேச செயலாளர்கள் இது தொடர்பான அறிக்கைகளை தந்துள்ளனா.; இதை வைத்து தோணாக்கால்வாய்களை மீட்டு துப்பரவு செய்து வெள்ளநீரை வடிந்தோடச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனமும் பங்களிப்புக்களை வழங்கவேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .