2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

'இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கின்ற தீர்மானம் தமிழர்களின் அபிலாஷைகளை பெற்றுத்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 01 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்; இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற தீர்மானமானது தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்புக்களையும் பெற்றுத்தர வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு திராய்மடு கிருஷ;ணா விளையாட்டுக் கழகத்தின் 24ஆவது வருட பூர்தியை முன்னிட்டு கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கான நிகழ்வில்;; பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்; உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'கால்பந்தாட்டப் போட்டியினை ஆன்மீக ரீதியாக ஆராய்வோமானால் உலகம் என்கின்ற மைதானத்திலே ஆன்மா பந்தாக இருந்து பலரது இன்ப, துன்பங்களில் அடிபட்டு இறுதியாக முத்தியடைகின்றது என்று கால்பந்தாட்டத்தை கூறுவார்கள்.

இன்று எமது இளைஞர்கள் இந்த மைதானத்திலே கால்பந்தாட்டத்தை ஆடினர்கள். ஆனால் ஜெனீவா என்கின்ற மைதானத்திலே இலங்கை தமிழினம் என்கின்ற ஒரு பந்து இலங்கை அரசாங்கத்;தினாலும் சர்வதேசத்தாலும் விளையாடப்படும் ஒரு நிலைமை இன்று உருவாகியுள்ளது.
எமது நாட்டிலே கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த மனிதாபிமான நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவிலே மனித உரிமை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே பாரதூரமான அநீதி நடைபெற்றிருக்கிறது என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து தீர்ப்பு கூறும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த உண்மையை இந்த அரசாங்கம் அறிந்தும் கூட, எமது மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்குத் தயாராக இல்லை. அவ்வாறு எமக்கு வழங்குமானால் எமது பிரதேசங்களை நாங்களே அபிவிருத்தி செய்வோம். நாங்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்.

எங்கள் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அபிவிருத்திகள் மக்களைச் சென்றடைய வேண்டும். எங்கள் மக்களின் வாழ்வுரிமையை சரியாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.  எமது மக்கள் அதற்காகத் தான் எங்களை மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாட்டிலே எமது மக்களுக்கு சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்குவதில்லை. அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளத்தான் நாங்கள் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஜெனீவாவில் கொண்டுவரப்டும் தீர்மானம் நிச்சயமாக அரசாங்கத்திற்கு எதிராகத்தான் அமையும். அதனை அறிந்து ஒரு அமைச்சருடன் அவர்கள் சார்பான குழுவை அனுப்பிவைத்துள்ளார்கள்.  ஆனால், ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்வு மட்டுமே மக்களுக்கு தீர்வாக அமையாது. அதற்கு பின்னர் எமது மக்களுக்காக பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

எமது மக்களின் தேவைகளை இந்த அரசாங்கம் இன்னும் உணரவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை எமது மக்களுக்கு வழங்குங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். அபிவிருத்திக்கு என ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 50 இலட்சம் ரூபா வழங்குகிறார்கள். அந்த நிதியை மாவட்டம் முழுவதும் பகிர்ந்தளிக்க வேண்டும்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .