2026 மே 04, திங்கட்கிழமை

ஹலால் விவகாரம் எதிர்க்கப்படுவது கவலையளிக்கிறது: ச.இ.ச.பே

Menaka Mookandi   / 2013 மார்ச் 04 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

'முஸ்லிம்களின் ஹலால் விவாகரம் சில தரப்பினரால் எதிர்க்கப்படுவது கவலையளிக்கின்றது' என மட்டக்களப்பு மாவட்ட சமதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவை தெரிவித்துள்ளது.

ஹலால் விவகாரம் தொடர்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக் காலங்களில் இடம்பெற்று வரும் சில சம்பவங்கள் வேதனையளிப்பதாக மேற்படி பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அப்பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அண்மைக் காலங்களில் முக்கியமாக இலங்கையின் பல பகுதிகளிலும் மக்களுடைய வழிபாட்டு நிலையங்கள் சிலரால் தாக்கப்பட்டு வருவதையும் முஸ்லிம் மக்களுடைய மதத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஹலால் உணவு சம்பந்தமான அறிக்கை பற்றி பல எதிர்ப்புக்கள் சிலரால் முன்வைக்கப்படுவதும் எமக்கு கவலையளிப்பதாய் இருக்கின்றது.

இலங்கை ஒரு பல்லின பல்மொழி, பல்சமய, பல்கலாசார மரபுகளைக் கொண்ட ஒரு நாடாக பல தூண்டுகோலாக விளங்குகின்றது. இந்நிலையானது மதங்களுக்கு கிடைத்துள்ள ஒரு பலமேயொழிய பலவீனமல்ல என்று நாங்கள் கருதுகின்றோம்.

இப்படியான சூழலில் அனைவரும் இணைந்து அமைதியுடன் வாழ்வது அமைதிக்கே வழிகோல வேண்டிய ஒரு நிலைப்பாடும் முன்னுதாரணமே அன்றி பிரிவினைகளுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும்  காரணமாய் இருக்க கூடாது. இருக்க முடியாது என்று நாங்கள் கருதுகின்றோம்.

நாம் எல்லோரும் மனுக்குலம் எனும் பாரிய மனித குடுமு;பத்தின் உறுப்பினர்கள் என்ற நிலைப்பாடும் அன்பு, கருணை, இறக்கம், பரஸ்பரம் நம்பிக்கை, எனும் கலாசார விழுமியங்களுக்கு உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்க முடியும்.

இப்படியான ஒரு நிலைப்பாட்டைத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதனையே இந்த நாட்டில் வேரூன்றி நிற்கின்ற பௌத்த மதம், இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்த்தவ மதமங்களைச் சேர்ந்த அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அண்மைக் காலங்களில் எல்லா சமயங்களிலும் அடிப்படை வாதம் எனும் பிணி ஊடுருவி மேற்கூறிய விழுமியங்களைச் சீர்குலைக்கவும் மனிதர்களை ஒற்றுமையாக வாழவிடாமல் பகமை என்னும் விதை நட்டு வளர்க்க முயல்வதையம் நாங்கள் அவதானித்து மனவேதனை அடைகின்றோம். இவ்விடயம் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டிய ஒன்றே தவிர நீரூற்றி வளர்க்கவேண்டிய ஒன்றல்ல என்பதை அனைவருக்கும் தெளிவாக எடுத்துரைக்க விரும்புகின்றோம்.

கடந்த பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்ட அனுபவம் இந் நாட்டு மக்களாகிய நமக்குண்டு. அந்த அகோர இழப்பீடுகளில் இருந்து இன்று நாம் முற்றாக மன அமைதி பெற்றவர்களாய் இல்லாமல் தவிக்கின்றோம்.

எனவேதான் இனிமேலும் இப்படியான ஒரு நிலைப்பாடு இலங்கைக்கு வரக்கூடாது என்று நாங்கள் அனைவரையும் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்' என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .