2026 மே 04, திங்கட்கிழமை

அரசாங்கத்தின் கையில் 'ரிமோட்கொன்றோல்': ஆளுநரின் கையில் 'மூக்கணங்கயிறு'

Kogilavani   / 2013 மார்ச் 12 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச். அப்துல் ஹுஸைன்


'கடந்த மாகாண சபை ஆட்சியைப் போன்று தான் தற்போதைய கிழக்கு மாகாண சபை ஆட்சியும் பொம்மை ஆட்சியாக உள்ளது. மத்திய அரசாங்கத்தின் கையில் 'ரிமோட்;கொன்றோல்' இருக்கின்றது. ஆளுநரின் கையில் 'மூக்கணங்கயிறு'.  மாகாண சபை சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் உள்ளதாக சபையிலும் ஊடகங்களிலும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதுதான் கிழக்கு மாகாண சபையின் இன்றைய நிலை' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இந்த நாட்டில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மத உரிமைகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதையே அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் பௌத்த கடும் போக்காளர்களின் நடவடிக்கைகள் வெளிப்டுத்துவதாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான்குளம் கணபதி பிள்ளையார் ஆலய மடப்பள்ளி மற்றும் அலுவலக கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 'அபிவிருத்திகளைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென அரசாங்கம் நினைக்கிறது. ஆனால் இனங்களிடையே மதங்களிடையே முரண்பாடு நிலவுமானால் அந்த அபிவிருத்தியினால் எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை.
 
தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக பலரும் பல்வேறு விதமாகப் பேசிக்கொள்கிறார்கள்' என்று அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

இதேவேளை, 'கடந்த ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவைக் கூட்டம் நடைபெற்ற போது முஸ்லிம்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஜெனீவாவுக்கே சென்று அறபு நாடுகளைக் கேட்டிருந்தார்கள்.

ஆனால், தற்போது முஸ்லிம்களின் மத கலாசார உரிமைகள் பறிபோகக் கூடிய பௌத்த மேலாதிக்க மதவாதம் இலங்கையில் தலை தூக்கியுள்ளது. தமது மத உரிமையைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் போராட வேண்டி வந்துவிட்டது.

இந்துக்கள் கடந்த வருடம் கார்த்திகை தீப நாளைக்கூட கொண்டாட முடியாத நிலை காணப்பட்டது. எமது தாயக பூமியில் இந்து ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் முளைக்கின்றன. தெற்கிலே சில கத்தோலிக்க தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பௌத்த மதம் அல்லாத ஏனைய மதத்தினர் தமது மத அனுஷ்டானங்களைச் செய்வதில் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்'  என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
'கிழக்கு மாகாண சபையின் தற்போதைய அரசாங்கம் தனித்தோ அல்லது கூட்டாகவோ ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கும் வரை அது சுதந்திரமாக இயங்கும் என நாம் எதிர்பார்க் முடியாது.
 
கடந்த மாகாண சபை ஆட்சியைப் போன்று  தான் தற்போதைய கிழக்கு மாகாண சபை ஆட்சியும் பொம்மை ஆட்சியாக உள்ளது. மத்திய அரசாங்கத்தின் கையில் 'ரிமோட்கொன்றோல்' இருக்கின்றது. ஆளுநரின் கையில் 'மூக்கணங்கயிறு'.  மாகாண சபை சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் உள்ளதாக சபையிலும் ஊடகங்களிலும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதுதான் கிழக்கு மாகாண சபையின் இன்றைய நிலை.
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனித்தோ அல்லது கூட்டாகவே ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .