2026 மே 04, திங்கட்கிழமை

தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 மார்ச் 13 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கீழ் வரும் ஏறாவூர் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். தாம் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 06ஆம் திகதி மட்டக்களப்பு கல்வி வலய மட்டத்திலான எல்லே விளையாட்டுப் போட்டியில்  தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கும் கல்லடி சிவானந்தா தேசியப்பாடசாலை அணிக்குமிடையில் போட்டி இடம்பெற்றது.

போட்டி முடிவடைந்த பின் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் மீது ஒரு குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும் இது குறித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக பாடசாலை அதிபர் எஸ்.ரவிதேவன் கூறினார்.

குறித்த சம்பவத்தில் ஏறாவூர் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் மூவர் காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியேறியுள்ளனர்.

ஆயினும் தாக்குதலுக்குள்ளான மாணவர்களை கல்வி அதிகாரிகள் சென்று பார்வையிடவில்லை எனவும் தளவாய் பாடசாலையை கல்வி அதிகாரிகள் புறக்கணித்து விட்டனர் எனவும் தாக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணைகள் மழுங்கடிக்கப்படுகின்றன என்று மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் இன்றைய எதிர்ப்பின்போது தெரிவித்தனர்.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக மட்டக்களப்பு கல்வி வலய ஏறாவூரப்; பற்று கோட்டக்கல்வி அதிகாரி எம் பாலசுப்பிரமணியம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன், ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஏ.பி. பெரேரா, தளவாய் பொலிஸ் சாவடிப் பொறுப்பதிகாரி கே.ஜி. சந்திரசேகர ஆகியோர் ஸ்தலத்திற்கு வந்து பெற்றோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தை மாற்றி வேறு மைதானத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் அல்லது தொடர்ந்து விளையாட்டு நிகழ்ச்சிகள் அங்குதான் நடைபெறுமாயின் அந்த மைதானத்திற்குள் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஏற்கெனவே நடந்து முடிந்த பெண்களுக்கான எல்லே நிகழ்ச்சியில் பாதுகாப்பு அச்சம் காரணமாக தாங்கள் பங்கு பற்றவில்லையாதலால் அந்த விளையாட்டு நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை மாணவர்களும் பெற்றோரும் முன்வைத்தனர்.

இது குறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஏற்கெனவே இருவர் கைது  செய்யப்பட்டுள்ள தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்றுவதாகவும் அங்கு வருகை தந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் கூறினர்.

விளையாட்டு மைதானத்திற்கு ஏற்கெனவே பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே பாதுகாப்பு அச்சத்தின் காரணமாக தாங்கள் பங்கு பற்றாத பெண்கள் எல்லே உட்பட ஏனைய தடகள நிகழ்ச்சிகளை மீண்டும் நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை தாங்கள் வலய கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தம்மைத் தாக்கியவர்களை அடையாளம் காட்ட முடியும் என்று தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் வலியுறுத்திக் கூறினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .