2026 மே 04, திங்கட்கிழமை

'யுத்தத்தால் பல்லாயிரக் கணக்கானோரை இழந்தோம்'

Kogilavani   / 2013 மார்ச் 14 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'யுத்தத்தால் ஆறாயிரத்துக்கும் அதிகமான போராளிகளை இழந்தோம். 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை இழந்திருக்கிறோம். கணவனை
இழந்த பெண்கள் 22ஆயிரம் உள்ளனர்' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

'இந்த வருட இறுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியும் மின்சாரம் இல்லாத  பகுதியாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் மின் விநியோகங்களினை வழங்கி வருகிறேன்' எனவும் அவர் தெரிவித்தார்.

கற்சேனைக் கிராமத்திற்கான மின்சார விநியோத்தினை ஆரம்பித்து, கற்சேனை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'நீண்ட கொடிய யுத்தம் காரணமாக இழந்த அனைத்து விடயங்களையும் நாம் ஒருசில வருடங்களில் பெற்றுவிடமுடியாது. தற்போது, பாதுகாப்புப் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினைகள், மின்சாரப் பிரச்சினைகள் நீங்கியுள்ளன.

படுவான்கரைப் பிரதேசத்தில் 90 வீதமான மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது. இந்த வருடு இறுதிக்குள் மாவட்டத்தில் எந்த ஒரு இடமும் மின்சாரம் இல்லாது இருக்கக் கூடாது.

நமது எதிர்கால சமூகத்தின் கல்வி, மற்றும் எமது மக்களின் பொருளாதார ரீதியான, கலாசார ரீதியான முன்னேற்றங்கள் கருதியே இந்த மின்சாரம் வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்திருந்தேன்.

அது தற்போது நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.

அரசியல் பலம் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. நீங்கள் அரசியல் பலம் பெற்ற மக்களாக தற்போதுள்ளீர்கள். யுத்தம் காரணமாக ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளை இழந்தோம், 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை இழந்திருக்கிறோம். கணவனை இழந்த பெண்கள் 22ஆயிரம் உள்ளனர்.

வவுணதீவில் 11ஆயிரம் ரூபா மில்லியன் செலவில் ஏறப்படுத்தப்பட்ட நீர் விநியோகத்திட்டம் போன்று சிறய சிறிய நீதிவிநியோகத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றினால் இந்த குடிநீர்த்தட்டுப்பாடு நீக்கப்பட்டுவிடும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மின் விநியோகத்திட்ட ஆரம்பிப்பு விழாவில், பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், மின்சார சபையின் களுவாஞ்சிக்குடி பிராந்திய மின்சார அத்தியட்சகர் கே.அனுசாந்தன், மீள்குடியேற்ற அதிகார சபை பணிப்பாளர் கே.சத்தியவரதன், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.எஸ்.கருணாதிலக, கற்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் எஸ்.மேகராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .