2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் இவ்வருட இறுதிக்குள் மின்சார தேவை பூர்த்தி செய்யப்படும்: வி.முரளிதரன்

Menaka Mookandi   / 2013 மார்ச் 16 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


'மட்டக்களப்பு மாவட்டத்தில் எண்ணிலடங்காத கிராமங்களுக்கு மின்னொளி கிடைத்திருக்கின்றது. இந்த வருட இறுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நூறு வீதம் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து விடலாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்' என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலய ஏறாவூர் - ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தில் மின்னிணைப்பை ஆரம்பித்து வைத்தலும் மற்றும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

பாடசாலை அதிபர் எஸ்.ஜெயராஜா தலைமையில் பாடசாலைக்கான மின்னிணைப்புத் திட்டமும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளும் நேற்று இடம்பெற்றன.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, ஏறாவூர்ப் பற்று கோட்டக் கல்வியதிகாரி எம்.பாலசுப்பிரமணியம், ஏறாவூர் தளவாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஜி.சந்திரசேகர ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு தொடர்ந்து பேசிய மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், 'போரினால் பாதிக்கப்பட்டு உட்கட்டமைப்புக்கள் சீரழிக்கப்பட்டிருந்த வாகரையிலிருந்து ஆரம்பித்து கிரிமிச்சை மதுரங்குளம் பனிச்சங்கேணி சின்னவத்தை வரையும் மின்சார விநியோகத்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது.

கிராமப் பிரதேசங்களான தரவை பள்ளத்துச் சேனை பொண்டுகள் சேனை கூழாவடி நரிப்புல் தோட்டம் மகிழவெட்டுவான் கரவெட்டி போன்ற பிரதேசங்களுக்கும் ஏற்கெனவே மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.

சுமார் ஐயாயிரம் மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மின்சார விநியோகத் திட்டம் நகரப்புறங்களில் தொடங்கி கிராமங்கள் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .