2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 மார்ச் 24 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.அனுருத்தன்

'உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில் திட்டங்களை அமைத்து மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக சுற்றுலாத்துறையில் நிபுணத்துவம் உள்ளோர் முன்வர வேண்டும்' என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டமானது உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில் பல வரலாற்று கலாச்சாரப் பண்பாடுகளையும் இயற்கை அழகையும் கொண்டமைந்த பிரதேசமாகும். இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்றும் அரசாங்க அதிபர் கூறினார்.

பாசிக்குடா அமதீஸ் சுற்றுலா விடுதியில் யூ.எஸ்.எயிட். மற்றும் யூ.எச்.பி நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த 'கிழக்கின் சுற்றுலாதுறை அபிவிருத்தி' என்ற தலைப்பிலான ஆய்வுக் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், சர்வதேச சுற்றுலாதுறை நிறுவன முன்னாள் தலைவர் ரொபட் பென்லி, கொழும்பு, கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், பிரதேச செயலாளர்கள், யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் அபிவிருத்தி சிரேஸ்ட திட்ட உத்தியோகஸ்த்தர் த.சக்திவேல், சுற்றுலாத்துறை தொழில் வல்லுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர் 'இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டமானது மிகவும் வறுமையான மாவட்டமாக உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையினை மாற்றுவதற்கு நாம் எல்லோரும் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை உருவாக்கி முன்னெடுத்துச் செல்லக்கூடிய கடப்பாடு உள்ளது' என்றார்.

அத்துடன், 'சுற்றுலாத்துறையை மேலும் விருத்தி செய்வதற்கு சுற்றுலாத்துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் தங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்குவதற்கு எமது அலுவலகத்தில் நிகழ்ச்சி திட்டப்பணிப்பாளர் ஊடாக  வழிவகைகளை செய்துள்ளேன். இதற்கமைய உரிய தரப்பினர் முன்வந்து ஆலோசனை வழங்க வேண்டும்' என்றார்.

'இப்பிரதேசத்தில் கணவர்களை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இவர்களது வாழ்க்கைத்தரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. வறுமை நிலையில் உள்ளவர்களை உல்லாசத்துறையின் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்' என்று அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

'தேசத்தின் மகுடம் மூலம் கிடைக்கப்பெற்ற 130 மில்லியன் நிதியின் மூலம் நகர அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளேன். மட்டக்களப்பு மாவட்டத்ததைச் சுற்றுலாத்துறைக்கு ஏற்றவகையில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் வாவியை அண்மித்த பகுதி, கடற்க்கரைப்பகுதி, விவசாயம், மீன்பிடி, வரலாற்று பாரம்பரியம், என பல பகுதிகளாக பிரித்து அபிவிருத்தி செய்வதற்க்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கோட்டைப் பகுதியை சுற்றுலாத்துறைக்கு ஏற்றவகையில் மாற்றம் செய்யும் முகமாக எமது அலுவலகத்தை இடம்மாற்றம் செய்வதற்கு நிதி ஒதுக்கீட்டினை பெறுவதிலும் சரியான இடத்தினை தெரிவு செய்வதில் ஈடுபட்டுள்ளோம்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .