2026 மே 04, திங்கட்கிழமை

செங்கலடி இரட்டைக்கொலை; மாணவர்கள் குறித்து பாடசாலை நிர்வாக ரீதியான விசாரணை ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 23 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

செங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் சந்தேக நபர்களாக காணப்படுவது தொடர்பான நிருவாக ரீதியான விசாரணைகளை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்ததாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

செங்கலடி மத்திய கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கச் சீர்கேடுகள் தொர்பாக ஏற்கனவே பல முறைப்பாடுகள் தனக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செங்கலடி நகர வர்த்தகரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி ரகு விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்படி பாடசாலையைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஏறாவூர் பொலிஸாரால் சந்தேகத்தின பேரில் கைதாகி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் படுகொலை செய்யப்பட்ட தம்பதியினரின் மகளான செங்கலடி மத்திய கல்லூரியில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவியும் உள்ளடங்குகிறார்.

குறித்த மாணவிக்கும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான இன்னொரு மாணவனுக்கும் இடையிலான காதல் தொடர்புகளின் பின்னணியிலேயே இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளது என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலையில் கவனிக்கப்படாத ஒழுக்கக் கேடுகள் இடம்பெறுவதான பரவலான குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ள நிலையிலேயே கல்விப் பணிப்பாளரினால் பாடசாலை நிர்வாக ரீதியிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என சகல தரப்பினரும் கட்டங் கட்டமாக பாடசாலை நிர்வாக ஒழுக்க விசாரணைகளுக்கு முகங்கொடுப்பர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .