2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

மாங்கேணி, கதிரவெளி வீட்டுத்திட்ட வீடுகளை பறிமுதல் செய்வதாக எச்சரிக்கை கடிதங்கள்

Menaka Mookandi   / 2013 ஜூலை 03 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணி மற்றும் கதிரவெளி கிராமத்துக் குடியிருப்பாளர்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டு அதில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், தாங்கள் குடியிருக்கும் வீட்டுக்குரிய தவணைக் கட்டணைத்தைப் பல வருடங்களாகச் செலுத்தாத காரணத்தினால் இறுதி எச்சரிக்கை சிவப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளரினால் கைச்சாத்திடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேற்படி கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'மாங்கேணி மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டத்தில் மேற்கூறப்பட்ட வீட்டின் தவணைக் கட்டணத்தை அல்லது வாடகையை இருவாரங்களுக்குள் செலுத்தும்படி தங்களுக்கு அறிவித்திருந்தும் அதுபற்றி தாங்கள் இதுவரை கவனம் செலுத்தவில்லை. ஆகையினால் என்னால் தங்களுக்கு அனுப்பப்பட்ட முதலாவது ஞாபகமூட்டும் கடிதத்தின் மூன்றாம் பந்திக்கிணங்க உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், சகல நிலுவைகளையும் வட்டித் தொகையினையும் வழக்குச் செலவுகளையும் மேலும் இவற்றுக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதி;கார சபையினால் செலவழிக்கப்பட்ட செலவுகளையும் தங்களிடமிருந்து அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், குறிப்பிட்ட வீட்டினதும் காணியினதும் உரிமையை ரத்துச் செய்து தகுதியான வேறு ஒருவருக்கு கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும் என்பதை இத்தால் அறியத் தருகின்றேன்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரவிலுள்ள மாங்கேணியில் முப்பது வீட்டுரிமையாளர்களுக்கும் கதிரவெளியில் இதே எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களுக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து இந்த எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் ஆயுத வன்முறைகளின் போதும், சுனாமி கடற் பேரலைத் தாக்கத்தின் போதும் முற்றாகச் சேதமடைந்து விட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரேயடியாக இத்தொகைப் பெரும் பணத்தைத் தங்களால் செலுத்த முடியாது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .