2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் சிறுபராய கர்ப்பம் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 வயதுக்கும் குறைவான இளம் பெண்கள் கர்ப்பம் அடைவது அதிகரித்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

வயது குறைந்த பெண் குழந்தைகள் கருத்தரிப்பதை குறைப்பதற்கான விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றும் போதே டாக்டர் நசிர்தீன் மேற்கண்டவாறு கூறினார்.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் நடத்தப்பட்ட இந்த செயலமர்வில் தொடர்ந்து உரையாற்றிய டாக்டர் நசிர்தீன், 'இந்த ஆண்டு குடும்ப சுகாதார பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் புள்ளி விபரப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் வயது குறைந்த அதாவது 20 வயதுக்கும் குறைவான பெண்கள் கர்ப்பம் அடைவது அதிகரித்துள்ளமை கண்டுபிடிப்பக்கட்டுள்ளது.

இலங்கையின் தேசிய ரீதியில் இவ்வாண்டு 20 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகள் கர்ப்பம் அடைந்திருப்பது 6.5 சதவீதமாகும். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 10.6 வீதமான 20 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் வயது குறைந்த இளம் வயது பெண்கள் கர்ப்பம் அடைந்திருப்பதை காட்டுகின்றது. நாட்டின் அபிவிருத்தியின் போது சுகாதாரமிக்க பிரஜைகளை உருவாக்குவதில் இந்த நிலை எதிர்கால பரம்பரைக்கு சவாலாக உள்ளதால் இதைப்பற்றி மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்' என்றார்.

'வயது குறைந்த இளம் பெண்கள் கர்ப்பம் அடைவதால் உள மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்களுக்குள்ளாகின்றனர்.
கல்வி ரீதியான பாதிப்பு ஏற்படுவதுடன் சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நண்பர்களிடத்திலிருந்தும் ஒதுக்கப்பட்டு தூரப்படுத்தப்படுகின்றனர். அத்தோடு பொருளாதார ரீதியான பாதிப்பையும் இவர்கள் சந்திப்பதானது உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

தாய் மற்றும் சேய் பிரசவத்தின் போது மரணமடைவது, கருச்சிதைவு ஏற்படுவது, கருவின் வளர்ச்சியும், குழந்தையின் வளர்ச்சியும் குறைந்து காணப்படுவது, குழந்தை பிறப்பின் போது பிறப்பால் அங்கவீனமடைவது, கருச்சிதைவு ஏற்படுவதால் மீள கர்ப்பம் தரிக்க முடியாமல் மலட்டுத்தன்மை அடைவது, போசாக்கில்லாத தாய்ப்பாலூட்ட முடியாத நிலை ஏற்படுகின்றது.

இது போன்ற பல உடல் ரீதியான பாதிப்புக்களை வயது குறைந்த இளம் வயது பெண்கள் கர்ப்பமடைவதால் சந்திக்கின்றனர். ஆரோக்கியமான ஒரு பிள்ளையை வளர்த்தெடுப்பதற்கு இது ஒரு தடையாக அமையும். இளவயது பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு பல அடிப்படை காரணங்களை நாம் பார்க்க முடியும்.

இளவயது பெண் பிள்ளைக்கு தாய் தந்தையர் திருமணத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட வேண்டுமென நினைப்பது, சிறுவயது காதல் மற்றும் ஊடகங்களில் பாலியல் தொடர்பான காட்சிகளை பார்ப்பது, கல்வி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது வயது குறைந்த நிலையில் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போன்றவைகளை குறிப்பிட முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X