2025 மே 03, சனிக்கிழமை

தேர்தல் வந்தால் தமிழ் தேசியம் பேசுகின்றார்கள்: பூ.பிரசாந்தன்

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

'தேர்தல் வந்தால் தமிழ் தேசியம் பேசுகின்றார்கள். ஆனால் அபிவிருத்தி என வருகின்றபோது எங்களை நாடுகின்றார்கள். தமிழ் தேசியம் பேசி நாம் எதை கண்டுள்ளோம். அடைய முடியாத இலக்கை நோக்கி நாம் ஆதரவளிக்கின்றோம். ஆனால் அதை அடைய முடியாது. தமிழ் தேசியத்தை நான் புறக்கனிக்கவில்லை. ஆனால் அது அடைய முடியாத இலக்கு. அதனால் அதற்கு பின்னால் செல்ல முடியாதுள்ளது'  என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார்.

'கிழக்கு மாகாண சபை இன்று நித்திரை செய்யும் இடமாக மாறியுள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று கல்விக் கோட்டத்திலுள்ள தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி தாழங்குடா ஸீப்றா விளையாட்டுக்கழக மைதானத்தில் பாடசாலை அதிபர் எஸ்.மதிசுதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'அரசாங்க அமைச்சர்களை கூட கிழக்கு மாகாண சபையில் சந்திக்க முடியாத நிலைமை இன்று காணப்படுகின்றது.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் இன,மத வேறுபாடின்றி இந்த கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் சகலரையும் உள்வாங்கி செயற்பட்டார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணசபை எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். நமக்காக ஆரம்பிக்கப்பட்ட மாகாண சபை இன்று எந்த கோணத்தில் செல்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

நமக்குள்ள ஒரே ஒரு சொத்து கல்வி மாத்திரம்தான். அந்த கல்வியை முன்னேற்ற நாம் அனைவரும் முன்னின்று உழைக்க வேண்டும்.
இன்று சமூக வலைத்தளமாக காணப்படும் முகப்புத்தகம் (பேஸ்புக்) நமது சமூகத்தின் மாணவர்கள் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை செலுத்தி வருகின்றது.

இதனால் இன்று தற்கொலைகள் நிகழ்வதை நாம் அறிந்து கொள்கின்றோம். இந்த முக நூலில் நல்ல விடயங்களுமுண்டு. ஆனால் அந்த நல்ல விடங்களை விட்டு விட்டு தீய பக்கங்களுக்கே நமது இஞைர் சமுதாயம் செல்கின்றது.

இதனை பெற்றார்கள் கவனத்தில்; கொண்டு மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இன்று மண்முனைப் பற்று கல்விக் கோட்டம் கல்வியில் வளர்ச்சி கண்டு வருகின்றது. இது மகிழ்ச்சியளிக்கின்றது. இதை இன்னும் மேம்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.

இந்த விளையாட்டு மைதானத்தை எதிர்காலத்தில் புனரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்' என  அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X