2025 மே 03, சனிக்கிழமை

தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனத்தை மனிதப் புதைகுழிகள் இயம்புகின்றன: ஜனா

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தமிழர் தம் வாழ்விடங்களில் அண்மைக்காலமாக நடைபெறும் நிகழ்வுகள் தந்தை செல்வா அன்று கூறிய தீர்க்க தரிசனத்தை நிதர்சனமாக்குவதற்காக நடைபெறும் நிகழ்வுகளாகவே உணர்கிறேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மனிதப்புதைகுழிகள் வெளிப்பட்டு வருகின்றமை குறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,

சாத்வீக வழிமுறையூடாக தமிழர் தம் வாழ்வுரிமையை பெறலாம் என்ற கருத்தியலில் வாழ்ந்த தந்தை செல்வா, சாத்வீக வழிமுறைகள் பெரும்பான்மை இனவாதத்தின் முன்னால் தோற்றுப் போன நிலைமையில் தான் 'இந்நாட்டு தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்' என்று கூறினார்.

அதன் பின்பு தமிழர் தலைவிதி ஆயுதப் போராட்டத்தால் தீர்மானிக்க புறப்பட்டது. அதுவும் முள்ளிவாய்க்காலோடு முடிவுக்கு வந்தது. அதன் பின்பு தமிழர் தம் வாழ்வியலை சர்வதேசம், புலம்பெயர் சமூகம், தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்பன தீர்மானிக்கும் ஒரு சந்தியில் ஒரு புள்ளியில் நின்று நிலைகொண்டிருக்கும் இந்த நிலையில் தான், எனக்கு தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனம் நினைவுக்கு வருகின்றது.

தமிழர் தம் பிரதேசங்கள் எல்லாம் இன்று படுகொலை செய்து புதைக்கப்பட்ட மண்டையோடு எலும்புக்கூடு நிறைந்த பூமியாக காணப்படுகின்றது. மாரியும் கோடையும் நஞ்சை, புஞ்சை விளைந்த நமது மண் இன்று மண்டையோடு விளையும் பூமியாக மாறியுள்ளது.

இந்த மண்டையோட்டு பூமியை முதலில் காட்டியவர் சிவ பூமி என போற்றப்பட்ட தொண்டர் தொழ பாலாவியின் கரைமேல் செத்தார் எலும்பணிந்த சிவன் என்று ஞான சம்பந்த பெருமானால் பாடப்பட்ட திருக்கேதீஸ்வர நாயகனாக மாதுமையம்பாளோடு பக்தி திருக்கோலம் கண்ட கேதீச்சரத்தானே. கால தேச வர்த்தமானம் கொண்டு இதனை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கில் திருக்கேதீஸ்வரத்தான் மண்டையோட்டை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் காட்டிய சூடுமாறமுன் திருமலை ஈஸ்வரன் தீருக்கோணேஸ்வரத்தான் தன் பங்குக்கு அவன் அடிவாரத்தில் புதைக்கப்பட்ட மண்டையோட்டை, எலும்புக்கூட்டை காட்டத் தொடங்கி விட்டான்.

இவற்றைப் பார்க்கும் போது படையினர் குடியிருந்த தமிழர் தம் புனித பூமிகள் எல்லாம் தமிழரது புதைகுழிகளாக்கப்பட்டுள்ளதாகவே காட்டுகின்றன. திருக்கேதீஸ்வர புதைகுழியும், திருகோணேஸ்வர புதைகுழியும் காலமறிந்து ஈஸ்வர சாட்சியாக வெளிப்படுத்துவது கடந்த யுத்தகாலத்தில் நடைபெற்ற கொடூரங்களின் உச்சக்கட்டம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.

'அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்' என்பது நம் ஆன்றோர் மொழி அகிம்சை, ஆயுதம் கடந்து இன்று தமிழர் தம் வாழ்வியலில் ஏற்பட்ட கொடூரங்களுக்கும் குரூரத்துக்கும் சாட்சியாக தெய்வம் வந்துள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

எந்த நேரத்தில் எதை எப்படி எவ்வாறு நடத்துவது என்பது அவன் திருவிளையாடல் என்றே நான் நினைக்கின்றேன். மூன்றாவது தடவை இலங்கையை ஜெனிவாவில் மூச்சிழுக்க வைக்கும் இத்தருணத்தில் திருக்கேதீச்சரத்தானும், திருகோணேஸ்வரத்தானும் மண்டை ஓடுகளையும் மனிதப் புதைகுழிகளையும் வெளிக்காட்டியது என்ன திருவிளையாடலோ! யார் அறிவார் அவன் செயலை.

ஆனால் இவைகள் அனைத்தினதும் ஐந்தொகையானது எனக்கு தந்தை செல்வா அன்று சொன்ன தீர்க்க தரிசனத்தை தான் நினைவுபடுத்துகிறது.

ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும் மற்றவர்களுக்கு நான் என்ன சொல்லட்டும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X