2025 மே 03, சனிக்கிழமை

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக போராடுவோம்: அரியநேத்திரன்

Kogilavani   / 2014 மார்ச் 06 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளுக்குனாவ மற்றும் கெவிலியாமடு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத குடியேற்றங்களுக்கு சட்ட ரீதியான அனுமதியினை யாரும் வழங்க முற்பட்டால் அவர்களுக்கு எதிராகவும் இந்த குடியேற்றங்களை அடாவடியாக மேற்கொண்டுவரும் பௌத்த தேரருக்கு எதிராகவும் மட்டக்களப்பு மாவட்ட மக்களை ஒன்றுதிரட்டி போராடவேண்டிய சூழ்நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
 
பட்டிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றுமாறு கோரிக்கை விடுவதற்கு மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கள தேரருக்கு எந்த அருகதையும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பில் சிங்கள ராவய அமைப்பின் மூலம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
'புளுக்குனாவையில் 55 சிங்கள குடும்பங்களும் மற்றும் கெவிழியாமடு பகுதியில் 250 சிங்கள குடும்பங்களும் யுத்த காலப்பகுதியில் வசித்துவந்தபோது அவர்களின் நிர்வாகம் உகனை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அவர்கள் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் பிரதேச செயலகம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதனை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை.
 
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 24 கிராமசேவையாளர் பிரிவுகள் உள்ளன. அதில் ஒரு கிராமசேவகர் பிரிவான கச்சக்கொடிசுவாமிமலை பிரிவிலேயே கெவிழியாமடு உள்ளது.
 
அங்கு மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கள தேரர் அத்துமீறி அடாவடித்தனமாக 33குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து அங்கு அத்துமீறிய குடியேற்றத்தினை செய்துள்ளார்.

அவர்களுக்கு வதிவிடத்தினை உறுதிப்படுத்தி நிரந்தரமாக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அத்துமீறி குடியேறியவர்களுக்கு நிரந்தர வதிவிட சான்றிதழ் வழங்குவது நியாயமற்ற செயலாகும்.
 
அதேபோன்று பட்டிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றுமாறு கோருவதற்கு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கள தேரருக்கு எந்த அருகதையும் இல்லை.
 
அவர் பட்டிப்பளையை சேர்ந்தவரும் அல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவரும் அல்ல. இதனை மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்.
 
இரு மாதங்களுக்கு முன்னர் குறித்த தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குள் நுழைந்து பிரதேச செயலாளரை தாக்கமுற்பட்டதுடன் சொத்துகளுக்கும் சேதம்விளைவித்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றிலும் உள்ளது. இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்துள்ள நிலையில் குறித்த தேரர் மக்களை திரட்டி சிங்கள ராவய என்ற பெயரில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் எவரும் கெவிழியாமடு பிரதேசத்தினை சேர்ந்தவர்களும் இல்லை. வேறு பகுதிகளில் இருந்து மக்களை கொண்டுவந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.
 
சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளுக்கு எவரும் நிரந்தரவதிவிட உறுதிப்பத்திரம் வழங்கமுற்பட்டால் அவர்களுக்கு எதிராகவும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பௌத்த தேரர்களுக்கு எதிராகவும் மட்டக்களப்பு மாவட்ட மக்களை ஒன்றுதிரட்டி போராடவேண்டிய நிலை தவிர்க்கமுடியாததாகமாறிவிடும்.
 
ஏற்கனவே குறித்த பிரதேசங்களில் இருந்தவர்கள் மீளகுடியேற்றப்படுவதையோ அவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்குவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. சட்ட விரோத குடியேற்றங்களை யார் மேற்கொண்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும். அது தமிழராக இருந்தாலும் சரி சிங்களவராக இருந்தாலும் சரி முஸ்லிம்களாக இருந்தாலும் சரி.
 
கெவிழியாமடு அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு தாக்கதல் செய்துள்ளது. இவ்வாறான நிலையில் அரசியல் செல்வாக்குடனும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடனும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வது கண்டனத்துக்குரியதாகும். இவ்வாறான ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் செய்யும் என்பதை கூறிக்கொள்கிறேன்.
 
சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளுக்கு யாராவது துணைபோவார்களானால் அவர்களை நாங்கள் துரோகிகளாக நோக்கவேண்டிய நிலையே ஏற்படும்.
 
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளாக கடமையாற்றுவோர் இங்கிருக்கும் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு ஏற்றாற்போல செயற்படவேண்டும்'  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X