2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழகத்தை மோசமான நிலைக்கு தள்ளிவிடாமல் செயற்படவேண்டும்: உபவேந்தர்

Kanagaraj   / 2014 மார்ச் 06 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்
 
கடந்த 30வருடகாலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழுக்களின் நடவடிக்கைகள் காரணமாகவே பல்கலைக்கழகம் மிக மோசமான நிலைக்கு சென்றது அந்த நிலையினை மீண்டும் தலைதூக்காத வகையில் செயற்படவேண்டிய நிலையில் இருப்பதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தெரிவித்தார்.
 
கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதை நிலை மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் உள்ள மருத்துபீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
பீடாதிபதிகளது ஏற்பாட்டில் நடைபெற்ற,  இந்த செய்தியாளர் சந்திப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள்,ஜனநாயகத்துக்கும் அபிவிருத்திக்குமான கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
 
இங்கு கருத்து தெரிவித்த உபவேந்தர்,
 
இந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிறு குழுக்களின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற 101 விரிவுரையாளர்கள் அதில் இருந்து விலகி உயர் கல்வி அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.அதேபோன்று சில தினங்களுக்கு முன்னர் சிலர் மேற்கொண்டுவரும் குழப்ப நிலை தொடர்பில் சகல பீடாதிபதிகளும் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
 
கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 157. இவர்களில் 36பேர் கற்கை விடுமுறையில் உள்ளனர்.தற்போது கடமையாற்றும் 121 விரிவுரையாளர்களில் 101 உறுப்பினர்கள் இந்த ஆசிரியர் சங்கத்துக்கு எதிராக கடிதம் எழுதி உயர்கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ளனர்.அந்தவேளையில் அந்த கடிதத்தில் கையெழுத்திடாதவர்களும் தற்போது எங்களுடன் இணைந்துள்ளனர்.ஆசிரியர்கள் சங்கம் என்று கூறிக்கொள்பவர்களிடம் 13 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
 
நாங்கள் மட்டக்களப்பு மாவட்ட மக்களை ஏமாற்றவில்லை.கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு பங்களிப்பினை வழங்கியுள்ளோம்.பௌதீக அபிவிருத்தி மற்றம் உள்ளக அபிவிருத்தி பலவற்றினை நாங்கள் செய்துவருகின்றோம்.
 
இதுவரை காலமும் தேங்கிக்கிடந்த விரிவுரையாளர்கள் நியமனங்கள்,பதவி உயர்வுகள் அனைத்தையும் நிவர்த்திசெய்துவிட்டோம்.இரு விரிவுரையாளர்களின் பதவி உயர்வு தொடர்பிலேயே பிரச்சினைகள் உள்ளது.அது நீதிமன்றில் வழக்கு உள்ளதால் அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கமுடியாது.
 
நான் பதவியேற்ற இரண்டு வருடங்களில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கிழக்கு பல்கலைக்கழகம் எட்டியுள்ளது.பீடாதிபதிகளின் நூறுவீத ஒத்துழைப்புடனேNயெ இந்த வெற்றியை எங்களால்பெறமுடிந்தது.
 
ஒரு சிலர் பல குழப்பங்களை ஏற்படுத்திவருகின்ற நிலையிலும் அவற்றினையெல்லாம் தாண்டி நாங்கள் எமது பணியை மேற்கொண்டுவருகின்றோம்.
 
குறிப்பாக சொல்லப்போனால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பட்டம்பெற்றுச்செல்லும் ஒருவர் கடந்த காலத்தில் தொழில் ஒன்றினைபெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்தார்.ஆனால் இன்று கலைப்பீடத்தில் பல மாற்றங்கள் செல்லப்பட்டுள்ளன.தகவல் தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.
 
அதேபோன்று மொழி பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் கலைத்துறையில் பட்டம்பெற்றுவெளியேறுவோர் சிறந்த தொழில் வாய்ப்பினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இதேபோன்று கல்வி முதுகலைமாணி பாடநெறியை இப்பகுதியில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு சென்றுபெற்றுவந்த நிலையில் இன்று அதனையும் எமது பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்துள்ளோம்.இருவாரங்களில் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
 
இதேபோன்று இந்துநாகரிக பீடம் தனித்துறையாக மாற்றப்பட்டுள்ளது.அதற்கான அனுமதியை உயர்கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.இதனை நான் எனது சொந்த முயற்சியின் ஊடாகவே பெறமுடிந்தது.இதேபோன்று பல தனித்துறைகளை பல்கலைக்கழகத்தில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
 
எனது பதவிக்காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தினையும் உருவாக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளேன்.அதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.நான் பல்கலைக்கழகத்தில் இருந்துசெல்லுமுன் அதற்கான அனைத்துவேலைகளையும் பூர்த்தியாக்குவேன்.அல்லது பொறியியல் பீடத்தினை உருவாக்குவேன்.
 
இதேபோன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை,கலாசார பீடத்துக்கு இதுவரையில் தனிக்கட்டிடம் எதுவும் இல்லாத நிலையே இருந்துவந்தது.எனினும் தற்போது அதற்கான தனிக்கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது.அது எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்படும்.
 
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் இருந்த நிதி தொடர்பான ஊழல்களை நூறுவீதம் இல்லாமல்செய்துவிட்டோம்.பல்கலைக்கழகத்தின் தாபன கோவைக்கு அமைவாகவே பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.இளம் தலைமுறையினரில் நல்ல தொழிற்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.இதில் சிரேஸ்டம்,கனிஸ்டம் பார்க்கமுடியாது.திறமையும் தொழிற்படும் நிலையும் கருத்தில்கொள்ளப்பட்டு பல்கலைகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
 
நான் பல்கலைக்கழக உபவேந்தராக கடமையேற்ற காலம் தொடக்கம் விரிவுரையாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு 35பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களில் 17 பட்டப்படிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இதற்கு மேலதிகமாக புதிய துறைகள் ஏழு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
மிகவும் நீண்டகாலம் பின்தங்கிய நிலையில் இருந்த எமது பல்கலைக்கழகத்தினை கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
 
இந்த நிலையில் எமது பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சீர்குலைக்க நினைக்கும் சிலர் தொடர்பில் நாங்கள் வெளிப்படுத்தவேண்டிய தேவையிருக்கின்றது.அந்த ஆசிரியர் சங்கத்தில் இருக்கும் சிரேஸ் விரிவுரையாளர் ஒருவர் உள்ள தாவரவியல் பீடத்தினால் இதுவரையில் ஒரு விரிவுரையாளரை உருவாக்கமுடியாத நிலையே உள்ளது.37வருடங்கள் பழமையான அந்த பீடத்தினால் இதுவரையில் ஒரு விரிவுரையாளரை உருவாக்கமுடியாத நிலைக்கு யார் காரணம்.இது தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டியுள்ளோம்.இது தொடர்பில் முழுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.சில மாற்றங்களை செய்யவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.
 
ஒரு சிலரின் எதிர்ப்புகளுக்காக எமது பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியை பின்தள்ளமுடியாது.நாங்கள் எதிர்ப்புகளை மேற்கொண்டுவரும் சிலர் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை குழப்பும் வகையில் செயற்படுவதன் காரணமாகவே இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம்.தாபன்கோவை அடிப்படையில் பல்கலைகழக பேரவைக்கு இது தொடர்பில் அறிவிக்கவுள்ளோம்.
 
என்னை கனேடிய பிரஜை என்றும் நான் உபவேந்தராக இருக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.நான் கனேடிய பிரஜை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் இந்த நாட்டில் இந்த மாகாணத்தில் பிறந்தவன் வழந்தவன் என்ற அடிப்படையில் எனக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.நான் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு பிரஜையொருவர் உபவேந்தராக பதவி வகிக்கமுடியாது என்று எந்த சட்டமும் இல்லை.என்னை ஜனாதிபதியே இந்த உபவேந்தராக நியமித்துள்ளார்.இது சட்டத்துக்கு முரணான விடயமாக இருந்தால் இது நடந்திருக்காது.
 
இதேபோன் நான் போனில் மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.அவ்வாறானால் அவர்க் அதனை நிருபீக்கப்பட்டும்.நான் எந்த பிரதேசவாதமும் பல்கலைக்கழகத்தில் பார்ப்பதில்லை.பீடாதிபதிகள் நியமனத்தில் கடந்த காலத்தில் பல பாதிப்புகளை எதிர்கொண்ட யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவரையும் நியமித்துள்ளேன்.
 
இவ்வாறு குற்றஞ்சாட்டும் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது பலம் பொருந்திய அமைப்பு என்றால் முடிந்தால் எனக்கு அவர்களால் ஏதாவது செய்யமுடியுமா என நான் சவால் விடுக்கிறேன்.உண்மையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது இலங்கையில் பலம் வாய்ந்த அமைப்பாக உள்ளது.ஆனால் இங்குள்ளது ஒரு சிலரினைக்கொண்ட அமைப்பாக மட்டுமே உள்ளது.அதில் இருந்த பலர் அதில் இருந்து விலகி புதிய ஆசிரியர் சங்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X