Gavitha / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
யுத்தகாலத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் காணிகள் பலராலும் சுவீகரிக்கப்பட்டன. இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்பதற்காவது காணி அதிகாரத்தை த.தே.கூ. யாருக்கும் விட்டுக்கொடுக்கக்கூடாது என கிழக்கு மாகாண சபையின் த.தே.கூ. உறுப்பினர் துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பணிமனையில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
முதலில் உங்களது ஆத்திரத்துக்கான விடயத்துக்கு வருகிறேன். த.தே.கூ. என்னை அமைச்சுப் பதவிக்கு நிராகரித்த தீர்மானத்தை நாம் நிராகரிக்கின்றோம். அது தொடர்பாக எமது கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பூரண விளக்கமளித்துள்ளார்.
நான் அமைச்சுப் பதவியையோ எம்.பி பதவியையோ கேட்டு இந்த போராட்ட பயணத்தில் இணையவில்லை. அதற்கு நான் ஆசைப்பட்டவனுமல்ல. எனினும் எமக்கான உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்ற போது, அதனை தட்டிக்கேட்காமலிருக்க முடியாது.
வடக்கு, கிழக்கு மாகாண சபையைக் கொண்டுவந்தவர்கள் நாம். யாரும் இதில் பங்கு போட்டுக்கொள்ள முடியாது. அமைச்சுப்பதவி கிடைக்கவில்லையென்பதற்காக நான் மக்கள் சேவையை நிறுத்தமாட்டேன். அதையிட்டு கவலைப்படவுமில்லை. நான் என்றும் உங்களோடு தான் நிற்பேன்.
காணி அதிகாரப் பரவலாக்கம் நடைபெறவிருக்கின்ற இன்றைய சூழலில் தமிழர்களைப் பொறுத்தவரையில் காணி அதிகாரம் மிகவும் முக்கியமானது.
யுத்தகாலத்தில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ்மக்களின் இலட்சக்கணக்கான காணிகள் சுவீகரிக்கப்பட்டு அவை பெரும்பான்மையானவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதற்கு அப்போதிருந்த ஒரு சில முஸ்லிம் அமைச்சர்களும் உடந்தையாக இருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்; கிழக்கு மாகாண சபைக்குரிய 1இலட்சத்து 13ஆயிரம் ஏக்கர் காணிகள் வன வள திணைக்களத்தால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2013இல் கையகப்படுத்தப்பட்டன. வாகரை, செங்கலடி, கிரான், பட்டிப்பளை மற்றும் வவுணதீவு போன்ற பிரதேசங்களிலுள்ள காணிகள் பறிபோயின. மேலும் எல்லைப் பிரதேசங்களிலுள்ள காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையினர் அத்துமீறி குடியேறப்பட்டனர். முதலமைச்சர், அமைச்சு பதவிகளை விட்டுக்கொடுத்தோம். ஆனால் காணியதிகாரத்தை விட்டுக் கொடுக்கலாமா?
த.தே.கூட்டமைப்பினுள் ஒரு சிலரின் சுயநல அரசியலுக்கான பதவிமோகத்துக்காக எமது தியாகத்தை விலை பேசமுடியாது. அரசியலுக்கு நேற்று வந்தவர்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். இன்னமும் தலைமைகள் தன்னிச்சையாக சர்வாதிகாரப்போக்கில் செயற்படுவது கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமாகவிருக்காது.
இந்நிலை தொடர்ந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் போராட்டம் வெடிக்கும். அதற்கு தலைமை தாங்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு வரும் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன்.
வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் இழந்த காணிகளை மீளப்பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். தற்போது உள்ளூராட்சி எல்லைகள் வரையறுக்கப்படவுள்ள இக்காலகட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறை திருமலை எல்லைக் கிராமங்களின் காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
எனவே. இந்நிலையில் காணியமைச்சு பதவியை விட்டுக் கொடுப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். மண்ணுக்காக போர் நடத்தியவர்கள் மரியாதை இழக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
30 minute ago
41 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
41 minute ago
48 minute ago
59 minute ago