2025 ஜூலை 09, புதன்கிழமை

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தமிழ் பேசும் ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 மே 07 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக தமிழ் பேசும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகஸ்தர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.முஹம்மது முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகஸ்தர் சங்கம் இன்று  வியாழக்கிழமை (07) விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

'கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டது. அதேவேளை, இம்மாகாணத்தில் கூடுதலான ஆளணியினரை கொண்டது கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு.

இந்த அமைச்சின் கீழ் வரும் கல்வித் திணைக்களத்தின் பயனாளிகளாக 308,203 தமிழ்மொழி மூல மாணவர்களும் 16,182 தமிழ்மொழி மூல ஆசிரியர்களும் உள்ளனர்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 4,457 சிங்களமொழி மூல ஆசிரியர்களும் 77,057 சிங்களமொழி மூல மாணவர்களும் மாத்திரமே உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழி மூல வலயக் கல்வி அலுவலகங்கள் 12 உள்ள அதேவேளை, 05 சிங்களமொழி மூல வலயக் கல்வி அலுவலகங்களே உள்ளன. அவ்வாறிருந்தும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தமிழ்மொழி சிறிதும் தெரியாத, தமிழ்மொழி பேசுவதை சற்றேனும் புரிந்துகொள்ள முடியாத சிங்களமொழி பேசும் செயலாளர் கடமையாற்றுவது தமிழ்மொழி ஆளணியை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த அமைச்சில் பல அசௌகரியங்களுக்கு வழிவகுத்துள்ளது.

சமீபத்தில் இந்த அமைச்சின் செயலாளர் தனிச் சிங்களத்தில் வெளியிட்ட சுற்றுநிரூபம் தமிழ்மொழி பேசுவோருக்கிடையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனவே, இந்த நிலைமையை  கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக தமிழ் பேசும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அதேவேளை, சிங்களமொழி பேசும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நன்மை கருதி கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் பதவிக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான பெரும்பான்மையினத்தவர்  ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த நியமனங்களின் மூலம் கிழக்கு மாகாணக் கல்வியில் புத்தெழுச்சியும் முன்மாதிரியும் ஏற்படும் என்றும் எமது சங்கம் நம்புகின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .