2025 ஜூலை 09, புதன்கிழமை

கிழக்கு மாகாண சபையின் மாபெரும் நடமாடும் சேவை

Princiya Dixci   / 2015 மே 07 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி,யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்ப்பதற்கு ஏதுவாக மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில், எதிர்வரும் வியாழக்கிழமை (14) மாபெரும் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சகல அமைச்சர்கள்,  மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், சகல திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் அனைவரையும் அழைத்து இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் முடிந்தளவு அன்றே உடனடித் தீர்வுகள் பெற்றுக்கொடுப்படும் என கிழக்கு மாகாணசபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

குறிப்பிட்ட நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் காணி, விவசாயம், மீன்பிடி, கால்நடை, வேலைவாய்ப்பு, பாதைகள், வடிகான்கள், கட்டடங்கள், சமுர்த்தி, பட்டதாரிகள், முதியோர், சிறுவர், மாணவர்கள், ஆசிரியர்கள், மாதர் சங்கங்கள் மற்றும் கிராமிய சங்கங்கள் ஆகிய அனைத்து வித பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாக இந்த நடமாடும் சேவை இடம்பெற இருக்கிறது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியதுறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், வீதி அபிவிருத்தி காணி அமைச்சர் ஆரியபதி கலபதி, கல்வி விளையாட்டுத்துறை அமைச்சர் தண்டாயுத பாணி, விவசாய கால்நடைகள் அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாஷ கலபதி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினி தேவி சாள்ஸ், பொலிஸ்மா அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாபெரும் வரலாற்று நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் கலந்துகொண்டு தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது போன்ற நடமாடும் சேவைகளை கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .