2025 மே 17, சனிக்கிழமை

எமது ஒற்றுமையால் தேசிய ஐக்கியத்தை நிரூபிக்க வேண்டும்: துரைராஜசிங்கம்

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

சிறுபான்மையின மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சர்வாதிகாரத்தை வீழ்த்தியதை போன்று எதிர்காலத்திலும் எமது ஒற்றுமையால் தேசிய ஐக்கியத்திற்கான பலத்தை நிரூபிக்க வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி, நீர்ப்பாசன, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கூட்டுறவு வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றகையில்,

நாம் மனசாட்சியோடு செயற்படுவோமேயானால்; பிரிவினைகளையும் தடைகளையும் அறுத்தெறிந்து பல நல்ல விடயங்களை சாதிக்க முடியும்.

நமது சிறுமைத்தனத்தின் காரணமாக நாம் பல்வேறு சோதனைகளுக்கு முகங்கொடுக்கின்றோம். இந்நிலை தொடரக்கூடாது. அதற்கு நாம் இடமளித்து விடவும் கூடாது.

இந்த நாட்டில் சுதந்திரம் என்கின்ற வார்த்தை எப்பொழுது பேசப்படத் தொடங்கியதோ அன்றிலிருந்து சிறுபான்மை மக்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டு விட்டது.

வடக்கில் தந்தை செல்வா, கிழக்கில் காரியப்பர் , அஷ்ரப் போன்ற பெரியார்கள்; தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் கட்டிக் காக்க கடுமையாக உழைத்தார்கள்.

ஆனால், எங்கிருந்தோ வந்த சிலர்; எங்களைப் பிரித்து துயரத்தில் ஆழ்த்தி இழப்புக்களை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டனர். அவற்றை நாங்கள் அடியோடு மறந்து அவற்றிலிருந்து அறிவார்ந்த சில விடயங்களை பாடமாக எடுத்துக்கொண்டு, அடுத்த ஆக்கபூர்வமான நகர்வுக்கு ஆயத்தமாக வேண்டும். அதுதான் நல்லாட்சியின் பலாபலனாக இருக்கும்.

இந்த நாடு பன்மைத்துவமுள்ள நாடு என்பதைக் கேட்க நாம் ஏங்கித் தவித்தோம். அதை ஜனாதிபதி தனது தேசிய தின உரையில் தெளிவாகச் சொன்னார். 

இந்நாடு பெரும்பான்மையின மக்களின் விருப்பப்படி சிறுபான்மை இன மக்கள் வாழ வேண்டும் என்கின்ற அடிமை நாடு அல்ல. மாறாக பன்மைத்துவத்தையும் ஒவ்வொரு சமூகத்தாரின் தனித்துவத்தையும் அங்கீகரிக்கின்ற பண்புகளைக் கொண்ட நாடாகும்.

நீண்ட காலத்துக்குப்பின் இவ்வாறான ஒருநிலை உருவாகியிருப்பதை சகித்துக்கொள்ள முடியாத சில விஷமிகள் அதனை குழப்ப நினைக்கின்றனர். 

அனைவரும் ஒன்றிணைந்து சர்வாதிகாரத்தை வீழ்த்தியுள்ளோம். அதேபோன்று எதிர்காலத்திலும் நாம் அவ்வாறானதொரு தேசிய ஐக்கியத்திற்காக எமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.

மனிதனை, மதங்களோ மொழியோ ஒரு போதும் பிரித்து வைத்ததில்லை. எங்களுடைய குறுகிய மனப்பாங்குகள்தான் மனிதர்களை பிரித்தாளுகின்றது என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .