2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பரராஜசிங்கம் கொலை வழக்கு: குற்றப்பத்திரம் தாக்கல்

Gavitha   / 2017 மார்ச் 08 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைசெய்தமை, கொலைக்கு எத்தனித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த படுகொலை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் முன்னிலையில், நேற்று (08) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்டதுடன், சந்தேகநபர்களிடமும் கையளிக்கப்பட்டது.  

இதன்போது, 4 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றத்தடுப்புப் பிரிவின் சார்பில், மன்றில், நேற்று (08) ஆஜராகியிருந்த அதிகாரிகள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரில் 4 பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனைய மூவரையும் தேடி வருவதாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். 

சந்தேகநபர்களில் ஒருவரான கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சார்பில் 6 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

மூன்றாவது சந்தேகநபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்பதால், அவர் மாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் என்பதுடன், சிறைச்சாலையிலும் நீதிமன்றத்துக்குள்ளும் அவருக்குப் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை நின்றனர். 

இக்கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், நீதிமன்ற பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸாரக்கும், நீதிபதி கட்டளையிட்டார். 

அத்தோடு, ஏனைய விடயங்களில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறையைப் பின்பற்றுமாறும் அவர் கூறினார். 

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர். 

 இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார். 

 இதேவேளை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (08) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட மேற்படி வழக்கு, எதிர்வரும் மே 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .