2025 மே 03, சனிக்கிழமை

22 ஆயிரம் சிறுவர்கள் ஆதரவற்ற நிலையிலுள்ளார்கள்: யமுனா பெரேரா

Kogilavani   / 2014 மார்ச் 06 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


 'இலங்கையில் 2011 ஆம் ஆண்டு சிறுவர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சுமார் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் சிறுவர்கள் ஆதரவற்ற  நிலையலுள்ளார்கள். அதேவேளை சுமார் நான்காயிரம் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்' என நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர் யமுனா பெரேரா வியாழக்கிழமை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஐயன்கேணிக் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் கொண்ட விதவைக் குடும்பமொன்றிற்கு வீடு ஒன்றைக் கையளித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறார்களுக்காக வடிவமைக்கப்பட்ட 'சிதுல நிவஸ'  வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஐயன்கேணிக் கிராமத்தில் தேர்ந்தெடுக்டகப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட வறிய விதவைக் குடும்பமொன்றிற்கு சுமார் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடொன்று கையளிக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையிலுள்ள நாலாயிரம் சிறுவர்களுக்கும் பாதுகாப்பளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 'சிதுல நிவஸ' வீடமைப்புத் திட்டம் நாடு முழுவதிலுமுள்ள மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு இல்லம் என்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளடங்கும். ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு வீடுகளை அமைத்து பாதிக்கப்பட்ட சிறார்களின் குடும்பங்களுக்கு வழங்க எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த சமூக முயற்சியை நான் பாராட்டுகின்றேன்.

இந்த வீடமைப்புக்காக எமது திணைக்களம் சுமார் எழுபத்தையாயிரம் ரூபாவையே ஒதுக்க முடிந்த போதும் கூட பிரதேச செயலாளரின் அயராத முயற்சியினால் இங்கு கூட்டிணைந்த சமூகப் பங்களிப்போடு சுமார் ஆறு இலட்சம் ரூபா செலவில் இந்த வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளை ஊர்வலமாக நடத்துவதற்குச் செய்யப்படும் அநாவசியச் செலவுகளிலும் ஆடம்பரத்திலும் பார்க்க ஒரு ஆதரவற்ற பாதிக்கப்பட்ட சிறுவர் குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பான வீட்டை அமைத்துக் கொடுப்பது எத்தனையோ கோடி பெறுமதியான புண்ணியம் மிக்க செயலாகும்.

சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளவர்களும், பரோபகாரிகளும், சமூக அமைப்புக்களும் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துச் செயற்பட்டால் சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதுடன் பாதுகாப்பான எதிர்காலத்தை இளம் சமுதாயத்திற்கு கையளிக்கவும் முடியும்' என்றார்.

இந்நிகழ்வில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் உதவி ஆணையாளர் நிர்மலி குமாரகே, மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், ஏறாவூர்ப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் ஜீ.நவரூபரஞ்சனி உட்பட சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X